Breaking News

கடற்படை தளபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்



ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கடற்படைத் தளபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

ஹம்பாந்தாட்டை துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தமது தொழிலை நிரந்தரமாக்க கோரியே சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் துறைமுக ஊழியர்களுக்கும் கடற்படையை அனுப்பி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை வெளிக்கொணர சென்ற ஊடகவிலாளருக்கு, ஊடக அடையாள அட்டை காண்பித்த பின்னரும் மிகவும் மோசமான முறையில் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதனை அறிக்கையிட சென்ற ஊடகவிலாளர் மீதான கடற்படையின் தாக்குதலுக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம் தெரிவிக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்யப்படும் என எதிர்பார்ப்பதுடன், அதனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை விற்பனை செய்தல் தொடர்பான பிரச்சினை காணப்படுவதாகவும் துறைமுக ஊழியர்களின் சாதாரண கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் கூறியுள்ளார்.