Breaking News

மாகாண ஆளுநருக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கக்கூடாது: வட மாகாணசபை பரிந்துரை

மாகாண ஆளுநர் பதவியானது பெயரளவிலேயே இருக்க வேண்டுமென்றும், குறித்த பதவிக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்படக் கூடாதென்றும் வட மாகாணசபை பரிந்துரை செய்துள்ளது.


நாடாளுமன்றத்திற்கும் மாகாணசபைகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக அரசமைப்பு சபையின் வழிநடத்தும் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை, அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் அரசமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையிலேயே வட மாகாண சபை மேற்குறித்த விடயத்தை பரிந்துரைத்துள்ளது.

ஆளுநருக்கான அதிகாரங்கள் சம்பந்தமாக ஏனைய மாகாணசபைகளைவிட வடக்கு மாகாணசபை மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களில் வட மாகாண சபையும் ஏனைய மாகாணசபைகளும் வெவ்வேறான கருத்துகளை முன்வைத்துள்ளன.

இதன்படி, தற்போதுள்ள அரசமைப்பு ஏற்பாடுகளுக்கமைய அரசமைப்பினால் குறித்தொதுக்கப்பட்ட விடயங்களில் ஆளுநரின் நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கான சந்தர்ப்பம் தொடர்பாக எந்த விசேட நிலைமையும் எழவில்லை என்று ஏனைய மாகாணசபைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால், ஆளுநர் பதவியானது பெயரளவிலேயே இருக்க வேண்டும் என்றும் அதன் விளைவாக மாகாண சபைக்குள் ஆளுநருக்கு நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது என்றும் வட மாகாணசபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மாகாணசபை கலைக்கப்பட்டு மீண்டும் புதியதொரு மாகாணசபை கூடும் வரையிலான இடைக்கால பகுதியொன்றின் போது மாகாண நிர்வாகம் தொடர்பில் எவ்வாறு ஆளுநரின் நிறைவேற்று அதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை பரிசீலிக்க வேண்டுமென உப குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.