நீண்ட காலம் சமாதானத்துடன் வாழ அதிகாரப் பகிர்வு குறித்து சிந்திக்க வேண்டும்
தமிழ் மக்களுக்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளதுடன், அவர்களுக்கு என மொழி மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன, எனவே அதனை மதித்து செயற்படும் அதேவேளை அவர்களுக்குரிய நியாயங்களையும் வழங்க வேண்டும், சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதற்குரிய சூழலை உருவாக்கி தரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் நிதியமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் வாழும் அனைவரும் நீண்ட காலத்திற்கு அமைதியாகவும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு அதிகாரப் பகர்வு குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வட கிழக்கு மாகாணங்களில், அதிகம் தமிழ் மக்கள் வாழ்வதுடன் அவர்களின் வரலாற்று ரீதியான பகுதிகளாக காணப்படுகிறது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி அவர்களுக்குரிய கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக ஸ்ரீலங்கா அரசு உடன்பட்டிருந்தது.
எனவே குறித்த உடன்படிக்கைபடி அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அத்துடன் அதிகாரப்பகிர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி தீர்வினை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டதோடு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து கடமையாற்ற விரும்புகிறது எனவும் தெரிவித்ததோடு குறித்த கோரிக்கைகளை தமிழ் மக்களின் பிரதி என்ற வகையில் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரவு செலவுத்திட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நிதிகளை ஒதக்குமாறும் அவர் நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.