ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது எனது கடமை
ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது தமது கடமை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இலங்கையில் 90 சதவீதமான தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளித்தனர்.
தங்களின் பிரச்சினைகளுக்கு தம்மிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தமது பொறுப்பு மாத்திரம் இன்றி கடமையும் கூட என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ஒருசில தினங்களிலேயே மறுசீரமைப்பை ஏற்படுத்திவிட முடியாது என்று கூறியுள்ளார்.இதற்கு காலம் எடுக்கும்.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் போது, அதன் ஊடாக அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான தீர்வு முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச விசாரணைக்கு அவசியம் இல்லை என்றும், இலங்கையின் அரசியல் யாப்பின் படி சர்வதேச நீதிபதிகளை உள்ளக விசாரணைகளில் ஈடுபடுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது இலங்கையின் நீதித்துறை மீதான நம்பகத் தன்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கிடையில் சமஷ்ட்டி குறித்தும் அவரிடம் கேள்விஎழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், தெற்கில் உள்ள மக்கள் சமஷ்ட்டி என்றால் அஞ்சுகின்றனர். வடக்கு மக்கள் ஒற்றையாட்சி என்றால் அஞ்சுகின்றனர்.எனவே இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் விவாதிக்காமல்இருப்பதே மேல்.புதிய அரசியல் யாப்பின் ஊடாக அதிக அதிகாரப் பகிர்வுகளை வழங்கிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும் வடக்கிலும், தெற்கிலும் உள்ள அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேநேரம் தற்போது இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அரசாங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.எனவே இதற்கு போட்டியாக புதிய சக்தி ஒன்று உருவாக வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.