எட்காவில் கையெழுத்திடுவது குறித்து அமைச்சவையே முடிவு செய்யும் – மகிந்த அமரவீர
இந்தியாவுடன், பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) கைச்சாத்திடுவது தொடர்பான இறுதி முடிவை சிறிலங்காவின் அமைச்சரவையே எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இந்தியாவுடனான எட்கா உடன்பாடு பொதுமக்களுக்கு நன்மையாக இருந்தால் மாத்திரம், கையெழுத்திடப்படும். இந்த விடயத்தில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தான் முடிவெடுப்பார்கள்.
ஒவ்வொரு உடன்பாடுகள் தொடர்பாகவும், நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், அமைச்சரவை முடிவுகளின் அடிப்படையில் தான் தீர்மானம் எடுக்கப்படும்.
இந்தியாவுடன் எட்கா உடன்பாடு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, எட்கா உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திடாது என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள், நாடாளுமன்றம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் ஒப்புதலுடன் தான் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.