நிமலராஜன் நினைவு நாள் ; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.
இதற்கமைய இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஏ9 வீதியிலுள்ள மாநகர சபைக்கு முன்னால் உள்ள விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவு தூபிக்கு ஊடகவியலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி தென்பகுதியில் இருந்து சென்றிருந்த சிங்கள ஊடகவியலாளர்களும், ஊடக உரிமைக்கான செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து நிமலாராஜனின் படுகொலைக்கு நீதி கோரி யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 அளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் தென்பகுதி ஊடகவியலாளர் பிரெடி கமகே மற்றும் மூத்த ஊடகவியலாளர்களான காண மயில்நாதன், வித்தியாதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.
கொடூரமான யுத்தம் இடம்பெற்றபோது, யாழ்ப்பாணம் உட்பட வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை துணிச்சலுடன் வெளியுலகிற்கு தெரியபடுத்துவதில் பெரும் பங்காற்றிய நிலையிலேயே ஊடவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பிரதேசத்தில் அமைந்திருந்த அவரது வீட்டில் வைத்து நிமலராஜன் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
பீ.பீ.சி சிங்கள சேவை ஊடாகவும், ராவய பத்திரிகை ஊடாகவும், தனது கொழும்பிலுள்ள சிங்கள ஊடக நண்பர்கள் ஊடாகவும் வடக்கில் மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு கொண்டுவந்த காரணத்திற்காகவே நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.சி தமிழ், பிபிசி, ராவய, உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஊடகவியலாளராக கடமையாற்றிய நிமலராஜன், மூன்று மொழிகளிலும் பரீட்சயம் உள்ளவராகவும், நடுநிலையாக செய்திகளை வழங்குபவராகவும் திகழ்ந்ததால் தென்னிலங்கை, மற்றும் சர்வதேச ரீதியில் ஊடகவியலாளர்களிடையே நன்மதிப்பை பெற்றவராகவும் காணப்பட்டார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான நிமலராஜன், தமிழ் மக்களுக்காக தனது சேவையினை அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.