சம்பூரில் சூரியசக்தி மின் திட்டம் – இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியா யோசனை
திருகோணமலை- சம்பூரில் சூரியசக்தி மின்உற்பத்தித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல் மின் திட்டத்தை கைவிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து ஒரு மாதம் கழித்து இந்தியா இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.
கோவாவில் பிரிக்ஸ் – பிம்ஸ்ரெக் மாநாட்டின் பக்க நிகழ்வாக, சிறிலங்கா அதிபருடன் கடந்த சனிக்கிழமை நடத்திய பேச்சுக்களின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை முன்வைத்துள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனல் மின் திட்டத்துக்குப் பதிலாக இயற்கை எரிவாயு மின்திட்டம் அல்லது சூரியசக்தி அல்லது காற்றாலை மின்திட்டத்தை அமைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிததிருந்தது.
2020ஆம் ஆண்டு 220 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலக்குடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூரிய சக்திக்கான போர் என்ற திட்டத்தை கடந்த மாதம் ஆரம்பித்து வைத்திருந்தார்.
2025ஆம் ஆண்டு 1000 மெகாவாட் மின்சாரத்தை இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
சிறிலங்கா புதுப்பிக்கத்தக்க சக்தியின் பக்கம் திரும்பியுள்ளதையடுத்தே, சம்பூரில் சூரியசக்தி மின்திட்டத்தை அமைக்க இந்தியா முன்வந்துள்ளது.