Breaking News

பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியும்- பஷில்

கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான மரண சான்றிதழை ஏன் மஹிந்த அரசு வழங்கவில்லையென்பது சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டு வந்திருந்த கேள்வியாகும். இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பஷிலிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே பஷில் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதால், பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை எளிதாக முன்னெடுக்கலாம். குறிப்பாக கூட்டமைப்பில் நீதியரசர்களும் வழக்கறிஞர்களும் உள்ளதால், அவர்களின் துணையுடன் தற்போதைய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

பிரபாகரனுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் மரண சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதற்கென ஒரு ஆணைக்குழுவை அமைத்து ‘எதற்காக பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கினீர்கள்?’ என விசாரணை செய்திருப்பார்கள்” என்றார்.