பொலிஸார் தவறுகளை இழைத்துள்ளனர் – ஒப்புகொள்கிறார் பொலிஸ் மா அதிபர்
பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“எந்தக் கொள்ளையோ, திட்டமிட்ட தாக்குதலோ, உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சூழலோ, அந்த தருணத்தில் இல்லாத நிலையில் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தெளிவாகவில்லை.
இந்தச் சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கையிடுவதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர். இது மிகப் பெரிய தவறு. இது தெளிவான ஒழுக்க மீறல்.
இரண்டு மாணவர்களின் உயிர்களின் பெறுமதியையும் இது பெற்றோருக்கு ஏற்படுத்தும் வலியையும் நான் உணர்வேன். இது ஒரு சேகமான நிகழ்வு.
இதுபற்றி அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.
ஓடும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரமில்லை என்று தேசிய காவல்துறை ஆணையச்செயலர் ஆரியதாச குரே வெளியிட்டுள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றே நினைக்கிறேன்.
சூழ்நிலைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச அல்லது தேவையானளவு பலத்தைப் பிரயோகிக்க காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 53 ஆவது பிரிவு, குறைந்தபட்ச மற்றும் தேவையான பலத்தைப் பிரயோகிப்பதற்கான சூழ்நிலைகள் குறித்து விபரிக்கிறது.
குற்றவியல் சட்டக்கோவையிலும், இதுபற்றிய வழிகாட்டுதல்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.