Breaking News

தப்பிச் சென்ற மாணவர்கள் முன்னால் இருந்து சுடப்பட்டது எப்படி? – சம்பந்தன் கேள்வி



யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர்,

உந்துருளியில் சென்று கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்ப்பிட்டிச் சந்தியருகே கடந்த 20ஆம் நாள் நள்ளிரவு சிறிலங்கா காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளனர்.

இரு இளைஞர்களும் விபத்திலேயே மரணமானதாக ஆரம்பத்தில் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

அடுத்தநாள் காலையிலேயே அவர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமாயினர் என்பது தெளிவானது.

உந்துருளியை ஓட்டிச் சென்றவர் துப்பாக்கிச் சூட்டினால் மரணமாகியுள்ளார். அதனால் ஏற்பட்ட விபத்தில் தலையில் படுகாயமடைந்து மற்ற மாணவர் மரணமாகியுள்ளார்.

இது தெரியவந்த பின்னர், சோதனைச்சாவடியில் தமது உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற போதே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

சிறிலங்கா காவல்துறையினர் சட்டத்துக்கு முரணான வகையில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டமை கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால், பின்னால் இருந்தவருக்குப் படாமல் உந்துருளியைச் செலுத்திச் சென்றவர் மீது குண்டு துளைத்தது எவ்வாறு என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அதிபரிடம் முறையிடப்பட்டதையடுத்து, ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முதற்கட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கடந்தகாலத்தில் நிகழ்ந்த உயர்மட்டத் தொடர்புகளைக் கொண்ட பல மோசமான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளனர்.

இந்தச் சூழலில், மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணைகள் பக்கசார்பற்றதாக இடம்பெறுமா என்ற சந்தேகங்கள் உள்ளன.

எனவே, சுதந்திரமான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை சிறிலங்கா பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் இதுபோன்ற சட்டத்துக்கு முரணான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், மாணவர்கள் கொலை தொடர்பாக பக்கசார்பற்ற- வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.