பிரபாகரனின் இடத்தை எவராலும் பூர்த்தி செய்ய முடியாது ..!!
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இடத்தை பூர்த்தி செய்ய முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது. அம்முயற்சி உண்மையானால் அதுவெறும் கனவாக மாத்திரமே இருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் சமூகத்தை இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்வதை விடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான பேச்சுவார்த்தை மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வர வேண்டும்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கோரிக்கைகள் புதிதானவையல்ல. இவை இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் முன்வைக்கப்படும் கோரிக்கைகளாகும். எனினும் இவை நாட்டிற்கு பொருந்தாதவை என்றவகையில் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வடக்கின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென தெரிவித்து வருகிறார். மஹிந்த ராஜபக்ஷவோ அரசாங்கம் வடக்கைப் பிரித்து வழங்கப் போவதாக கூறுகிறார்.
உண்மையில் இது இரண்டுமே நடக்கவில்லை. நாட்டை பிரிக்க விரும்பும் அடிப்படைவாதிகள் தெற்கில் போலவே வடக்கிலும் உள்ளனர். இவர்கள் இவ்வாறான சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்த முனைகின்றனர். இதுவே நாட்டின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாதகமாக அமைகிறது என்றும் குற்றம் சாட்டினார்.