Breaking News

வலி நிவாரணி வழங்கி சித்திரவதைக்கு உட்படுத்தினர்: முன்னாள் போராளி



இறுதி போரில் சரணடைந்த போது வலி நிவாரணி வழங்கி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்த தன்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைக்கென கொழும்பிற்கு அழைத்துச் சென்று நான்காம் மாடியில் வைத்து அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் குறித்த முன்னாள் போராளி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து மேலும் தெரிவித்த அவர், விசாரணைகளின் போது சீன நாட்டு தயாரிப்பான வலி நிவாரணி ஸ்பிரே ஒன்றை எனது உடலில் அடித்தார்கள். ஸ்பிரே அடித்ததும் உடலில் ஒரு வித விறைப்புத் தன்மை ஏற்பட்டு உடலில் எந்தவிதமான தாக்குதலோ சித்திரவதையோ செய்தாலோ வலி இருக்காது. அந்த ஸ்பிரே அடித்த பின்னர் விசாரணைகளை தாக்குதல் மற்றும் சித்திரவதையுடன் ஆரம்பிப்பார்கள்.

விசாரணைகளின் பின்னர் எம்மை தடுத்துவைப்பார்கள். அதன்போது குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அந்த ஸ்பிரேயின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்போது வலி ஏற்படத் தொடங்கும். பின்னர் மரண வலி ஏற்படும் அப்போதே நாம் வலியால் துடித்துக் கத்துவோம். அது எமக்கு கடும் வேதனையைத் தரும்.

தற்போது நான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டேன். ஆனால் அக்காலப்பகுதியில் என் மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதையால் நான் இன்னமும் பாதிக்கபட்டுள்ளேன். கடுமையான தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்படும் நேரங்களில் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை சுவரில் அடிக்க வேண்டும் போல இருக்கும்.

வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகளுடன் ஆவேசமாகக் கத்தி சண்டை பிடிப்பேன். இதனால் மனைவி பிள்ளைகள் என்னை வெறுக்கும் நிலைக்கு சென்று உள்ளனர். எனவே, முன்னாள் போராளிகள் மற்றும் சித்திரவதைகளுக்குள்ளானவர்கள் அனைவரையும் மருத்துவ சிகிச்சைக்குட்பட்டுத்த வேண்டும். அதன் ஊடாக ஊசி ஏற்றப்பட்டமை, இரசாயான உணவு வழங்கப்பட்டமை தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும் எனவும் மேலும் வலியுறுத்தினார்.