Breaking News

வடக்கில் பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் எக்காலத்திலும் இருக்கவில்லை: வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் இருக்கும் பௌத்த எச்சங்கள் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்த காலத்துக்கு உரியவையே அன்றி அங்கு பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் எந்தக் காலத்திலும் இருக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


அண்மையில் தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே பேரவையின் இணைத்தலைவரான விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வடமாகாணத்தில் சிங்களக் கிராமங்கள் சென்ற 100 வருடங்களுக்குள்ளேயே வளர்ந்து வந்துள்ளன. அதுவும் வவுனியா மாவட்டத்தின் தெற்குக் கோடியில் ஒரு பகுதியே அது. மற்ற இடங்களில் எல்லாம் பலாத்காரமாக அரசாங்கம் மக்களைக் குடியேற்றியே கிராமங்கள் உதித்துள்ளன.

மணலாறு வெலிஓயாவாக அண்மையிலேயே மாறியது. அதைப் பாரம்பரிய சிங்களக் கிராமம் என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பது போன்றதானது. எந்தெந்தக் கிராமங்களை மனதில் வைத்து அவற்றைப்பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது என்பது விளங்கவில்லை.

வட மாகாணத்தில் இருக்கும் பாரம்பரிய சிங்களக் கிராமங்களை அடையாளங் காணுவதும் அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சர் றிஷாட் பதியுடீன் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் கடப்பாடுகளில் ஒன்று. வட மாகாண சபை இதனை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இதனை எதிர்க்காவிட்டால் எமது தனித்துவம், எமது பாரம்பரியம், எமது சுயநிர்ணய உரிமை யாவும் பாதிக்கப்படுவன. அவ்வாறான செயலணியை வாபஸ் பெற வேண்டும் என்று குரல் கொடுப்பது அவசியமாகியுள்ளது என்றார்.