பௌத்தர்களே இல்லாத தமிழர் பகுதியில் விகாரை - சிறீதரன் விசனம்
தமிழர் தாயகத்தைச் சிங்கள பௌத்த மயமாக்க, இராணுவப் பின்னணியில் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் அடாத்தாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலை சட்டவிரோதமாக அபகரித்துள்ள இராணுவம், அப்பகுதியில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து வருகின்றது.
இந்த பௌத்த விகாரையைப் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், மத்திய செயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா ஆகியோர் அந்த பகுதிக்கு நேற்றைய தினம் சென்றிருந்தனர்.
எனினும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்குள் செல்ல முடியாதவாறு இராணுவத்தினரால் முட்கம்பி வேலியும் மதிலும் அமைக்கப்பட்டிருந்ததுடன், காவலுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனால் அந்த பகுதிக்குச் செல்ல முடியாது முட்கம்பி வேலிக்கு அப்பால் நின்று பௌத்த விகாரையின் கட்டுமாண வேலைகள் இடம்பெற்று வருவதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட சிறிதரன், தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் இராணுவத்தினரது துணையுடன் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தொடருமாயின் சில காலத்தில் தமிழர்களது கலாசாரம் அழிக்கப்பட்டு, தமிழர்கள் என்றொரு இனம் இங்கு வாழ்ந்துள்ளதா என்ற நிலைதான் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்திற்குள்ளேயே சிங்கள இராணுவத்தினரால் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு வீதம் கூட பௌத்தர்கள் இல்லாத தமிழர்ளை மாத்திரம் கொண்ட பகுதியில் இப்படியான பிரமாண்டமான பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களுடைய கலாசாரத்தை அழித்து இனச்சுத்திகரிப்புச் செய்து தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள பௌத்த அரசாங்கத்தின் நடவடிக்கையாகவே தான் தமிழர்களாகிய நாம் இதைப் பார்க்கின்றோம் என சிறிதரன் கூறியுள்ளார்.
தமிழர்களுடைய பாரம்பரிய வழிபாட்டிடமான வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மகிமையை அழிப்பதற்காக இராணுவ இயந்திரத்தை வைத்து அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
தமிழ் மக்களை அடக்கி ஆக்கிரமிப்பதற்காக தமிழர்களுடைய அடையாளங்களை அழிப்பதற்காக அரசாங்கம் மிகவேகமாகச் செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.