செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லம் மீது ஸ்ரீலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுட்டிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் பிற்பகல் 3.30 க்கு இடம்பெறவுள்ளன.
இந்த அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு செஞ்சோலையில் தங்கியிருந்த மாணவிகள் மீது ஸ்ரீலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 மாணவிகள் உடல் சிதறி பலியாகியதுடன், 129 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீலங்கா விமானப்படையினரின் இந்த கொடூரமானத் தாக்குதலில் 15 வயது முதல் 18 வயதுடைய கல்வி பொது தராதர உயர்தர மாணவிகளே படுகொலை செய்யப்பட்டனர்.
எனினும் இந்தப் படுகொலையை நிராகரித்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயிற்சி முகாமொன்றின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டதாகக் கூறி அப்பாவிச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதை மூடிமறைத்திருந்தது.
எனினும் செஞ்சோலை சிறுமிகள் இல்லம் மீதான விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளின் மரணத்திற்கு நீதியை பெற்றுத்தர பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரும், தமிழ் மக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் இதுவரை அந்தப் படுகொலை தொடர்பில் எந்தவொரு நீதியான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் தமிழ் மக்களின் பேராதரவுடன் 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி பதவிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமாவது சாக்குப்போக்குக் கூறாமல் விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட தமது பிள்ளைகளின் மரணத்திற்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு
செஞ்சோலை படுகொலையின் ஆண்டு நினைவில்
செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள்
தொடர்புடைய முன்னைய செய்திகள்
செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு
செஞ்சோலை படுகொலையின் ஆண்டு நினைவில்
செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள்