பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் மக்கள் எதிர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை முதல் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமான பரவிப்பாஞ்சானில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளில் ஒருபகுதி கடந்த மே மாதம் 10 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.
எனினும் 54 குடும்பங்களுக்கு சொந்தமான 180 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றன.
இதனையடுத்து காணி உரிமையாளர்களில் 20 குடும்பங்கள் தமது காணிகளையும் விடுவிக்குமாறு கோரி கடந்த யூன் மாதம் 28 ஆம் திகதி பரவிப்பாஞ்சான் முகாம் இராணுவத்தினரிடம் கடிதமொன்றை கையளித்திருந்தனர். இதற்கான பதில் வழங்கப்படாததையடுத்து கடந்த யூலை மாதம் மீண்டும் இராணுவத்தினரைச் சந்தித்த மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
எனினும் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை தாம் விடுவிக்க முடியாது எனவும் அரசாங்கமே இது தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த யூலை மாதம் தொடர் உண்ணாவிரத போராட்டமொன்றையும் முன்னெடுத்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் கடந்த ஜூலை மாதம் மாவட்ட செயலகத்திற்கு சென்ற மக்கள் அரச அதிபரிடம் மனுவொன்றை கையளித்தனர்.
இந்தநிலையில் காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் உறுதியளித்திருந்தார்.
எனினும் காணியை விடுவிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் காணி உரிமையாளர்கள் மீண்டும் கடந்த புதன்கிழமை ஒன்றுகூடி இன்று சனிக்கிழமைக்கு முன்னர் காணிகளை விடுவிக்குமாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை மேற்கொள்வதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையிலேயே இன்று சனிக்கிழமை காலை பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.