அரசாங்கத்திற்கு எதிராக - மஹிந்த அழைப்பு
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி கடும் பொருளாதார சுமைகளை சுமத்திவரும் மைத்திரி – ரணில் அரசாங்கத்திற்கு எதிராக விரைவில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே மஹிந்த இந்தத் தகவலைக் குறிப்பிட்டார்.
தெஹிவளை – கல்கிசை மாநகர முதல்வர் தனசிறி அமரதுங்க நேற்றைய தினம் அவரது இல்லத்தில் ரமழான் நோன்பிருக்கும் முஸ்லீம்களுக்காக விசெட விருந்துபசாரமொன்றை ஏற்பாடுசெய்திருந்தார்.
இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அழைக்கப்பட்டிருந்தார்.
முஸ்லீம் மக்களுக்கு எதிரானவன் என தன்னை அடையாளப்படுத்தி முஸ்லீம் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்க சிலர் மேற்கொள்ளும் சதிகளை மக்கள் நம்பவில்லை என்றும் தெரிவித்த மஹிந்த கூடிய விரைவில் பலமான அணியொன்றை திரட்டி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் குதிக்கப்போவதாக சூளுரைத்தார்.
இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
( ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி --- இந்த அரசாங்கத்திற்கு எதிராக பலம்வாய்ந்த சக்தியொன்று அணி திரள்கின்றது. அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதால் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பதற்கும், பழிவாங்கும் செயல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதற்கு மக்கள் தேசிய சக்தியொன்றை அமைக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
அதனால் கூட்டு எதிர்கட்சியினரான நாம் சந்தித்து அந்த விடையம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாடாளுமன்றில் இருப்பவர்களை மாத்திரமன்றி அதற்கு வெளியில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு பலம்வாந்த தேசிய சக்தியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்மூலம் மக்கள் விரோத இந்த அரசாங்கத்திற்கு முடிவு கட்டவுள்ளோம்.
வற் வரி அதிகரித்ததால் வாழ்க்கைச் செலவு சடுதியாக உயர்ந்துள்ளது. ஆனால் அரசாங்கமோ மஹிந்த ஆட்சியில் பெற்ற கடனை்களை அடைக்கவே வற் வரியை அதிகரித்ததாக கூறுகின்றது. ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவெனக் கூறி கடந்த ஒன்றரை வருட ஆட்சிக் காலத்தில் இந்த அரசாங்கம் பத்து பில்லியன் டொலர் கடனை பெற்றுள்ளது. இவ்வாறு இந்த அரசாங்கம் நாட்டை பொருளாதார சீரழித்து வருவதைத் தடுப்பதற்காகவே நாம் பலம்வாய்ந்த அணியொன்றை அமைக்கத் திட்டமிட்டோம். )