தன் தார்மீகக் கடமையை இந்தியா செய்யுமா?
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவானது இந்தியாவிடம் கைய ளிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணைத் தூதர் ஆர்.நடராஜன் மூலமாக இந்திய மத்திய அரசுக்கு கையளிக்கப்பட்டுள்ள இத்தீர்வுத்திட்ட முன்மொழிவானது ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் வழங்கப்படும் என தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைய வேண்டுமாயின் அதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.எனவே இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட முன்மொழிவானது சர்வதேச நாடுகள் அனைத்துக்கும் தெரியப்படுத்துவது அவசியம் என்பது ஏற்புடையதாகும்.
தமிழ் மக்கள் தங்களுக்கான ஆகக்குறைந்த தீர்வாக எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை எழுத்து மூலம் தெரியப்படுத்துவது ஒரு நியாயமான அணுகு முறையாக இருக்கும் .இன யுத்தம் நடந்து முடிந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், இன்னமும் தமிழ் மக்களுக்காக உரிமைகள் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்களுக்குரிய தீர்வுத்திட்டத்தை வழங்குவது அவசியம் என்ற நினைப்புகள் தென்பகுதியில் இருப்பதாகவும் தெரியவில்லை.சமஷ்டி என்றவுடன் பேரினவாதிகள் கொதித்து எழுகின்றனர். நாட்டைக்கூறுபோட ஒருபோதும் இடமளியேன் என்கிறார் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இவற்றைப் பார்க்கும் போது இங்கு என்னதான் நடக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நாட்டைக் கூறுபோட்டுத் தாருங்கள் என்று கேட்கவில்லை. மாறாக சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சுதந்திரமாக – நிம்மதியாக வாழவேண்டும். இதற்கான உரிமைகளைத் தாருங்கள் என்றே கேட்கிறார்கள்.
சமஷ்டி என்பது தமிழ் மக்கள் இன்னுமொரு பிரச்சினைக்குள் சிக்குண்டு சின்னாபின்னப்படாமல் இருப்பதற்கான ஒரு தீர்வு முறையாகும். இதுபற்றி தென்பகுதி மக்கள் எந்த வகையிலும் அச்சம் கொள் ளத் தேவையில்லை.
எனினும் அவர்கள் அச்சம் கொள்பவர்களாக இருந்தால் அது தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தல் அவசியம் . இதைச் செய்வது காலத்தின் கட்டயமாகும்.
இதற்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதற்கு மேலாக இந் தியாவின் பங்கும் பணியும் மிகவும் அவசியமானது ஆகும்.
இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. எனவே இவ்விடத்தில்தான் இந்தியா தனது தார்மீக கடமையை செய்தாக வேண்டும்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னணியில் இந்தியாவும் இருந்தது என்ற தகவல்கள் உள்ளபோதிலும் இன்றுவரை தமிழ் மக் கள் இந்தியாவை நம்புகின்றனர்.
இந்தியா எங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரும். பெற்றுத்தரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கை.ஆகையால் தமிழ் மக்கள் பேரவை கொடுத்த தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காண இந்தியா முன்வரவேண்டும்.
இவ்விடத்தில் சமஷ்டி எந்த வகையிலும் இலங்கையைக் கூறுபோடாது என்ற உத்தரவாதத்தை இந்தியா தென்பகுதி மக்களுக்கு வழங்கும் போது சமஷ்டி என்ற தீர்வு சாத்தியமாவது இலகுவாகும் என்பதால், இந்தியா தனது தார்மீக கடமையை செய்யவேண்டும் என்பதே தமிழ் மக்களின் வேண்டுதல் ஆகும்.