போரின் இழப்பீடுகளை வழங்கும் முகமாக வவுனியாவில் நடமாடும் சேவை
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முகமாக புனர்வாழ்வு அதிகார சபையால் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடமாடும் சேவை இடம்பெற்றது.
யுத்தத்தில் உயிரிழப்புக்களை எதிர்நோக்கிய குடும்பங்கள், அவயங்களை இழந்தோர், வீடுகள், சொத்தழிவு, வழிபாட்டுத் தலங்களின் அழிவு என்பவற்றுக்கான நஷ்ட ஈடுகளை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்குரிய ஆவணங்களை கோவைப்படுத்தும் முகமாக இவ் நடமாடும் சேவை நடைபெற்றது.
இவர்களுக்கான நஷ்டஈடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ் நடமாடும் சேவையில், புனர்வாழ்வு அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் எஸ். புகேந்திரன், பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.பார்ஹதீன், பிரதி பணிப்பாளர் ஹூசைன், புனர்வாழ்வு அதிகார சபையின் வடமாகாண பொறுப்பதிகாரி எஸ்.பி.செல்வராஜா மற்றும் அதிகார சபை உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டு மக்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொடுத்தனர்.
இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை மன்னாரில் நடைபெறவுள்ள புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவைக்கு 200 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.