கூட்டமைப்பினருடன் இணைந்து பேசுவோம்! என்கிறது சு.க.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கம் கண்டுள்ள நிலையில் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து இரண்டு கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவித்தனர்.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீர்மானம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சிதலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற போதேஇவ்வாறு தெரிவிக்கப் பட்டது.
இது தொடர்பில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முக்கிய அம்சங்களில் ஒன்றாக அரசியலமைப்பு திருத்தம் இடம்பெற் றிருந்தது.குறிப்பாக காலஞ்சென்றமாதுலுவாவே சோபித தேரர் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வை எட்டவேண்டுமாயின் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்திருந்தார். அதில் இருந்து இந்த கருத்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளன. 1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியல் திருத்தங்கள் காணப்படுகின்றன. அதேபோல் 2000ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் வாக்கெடுப்பிற்கு விடப்படவில்லை. எவ்வாறாயினும் இந்த மூன்று அரசியலமைப்பிலும் ஜனாதிபதி ஒருவர் தனது அதிகாரத்தை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டை ஆண்ட தலைவர்கள் ஒவ்வொருவரும் தாம் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாகக் கூறி தமது பதவிக்காலத்தில் அதிகாரத்தை பலப்படுதியுள்ளனரே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை ஐக்கியப்படுத்தும் வகையில் செயற்படவில்லை.
இது மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகவே கருதப்பட்டது. எனினும் இந்த பிரச்சினைக்கும் இப்போது தீர்வு காணும் பயணம் ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை குறைக்கும் நடவைக்கையை மேற்கொண்டுள்ளளார். அதேபோல் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்டு நாட்டில் நிலவும் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் எனவும் சிந்தித்து செயற்படுகின்றார்.
எனினும் இப்போது அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதே தவிர அது தொடர்பில் எந்தவொரு வரைபுகளையும் இன்னும் எவரும் முன்வைக்கவில்லை. அமைச்சரவையில் கூட பிரேரணை எதுவும் இன்னும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் ஒரு சாரார் மாத்திரம் நாட்டில் பிரிவினைக்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் பௌத்தம், சிங்கள தேசம் அழிக்கப்படுவதாகவும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அரசியலமைப்பு திருத்தம் எவ்வாறு வரப்போகின்றது என்பது தெரியாமலேயே இவர்கள் கற்பனைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். பிரிவினை ஏற்படும் என்பது வெறும் கற்பனை மட்டுமேயாகும். ஆகவே விடயம் என்னவென்பதை தெரிந்துகொள்ளாது விமர்சனங்களை முன்வைக்க வேண்டோம்.
எந்த சந்தப்பத்திலும் நாட்டின் பெளத்த கொள்கைக்கோ, அல்லது ஒற்றையாட்சிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் மிகத் தெளிவாக இந்த கருத்துகளை மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 13ஆம் திருத்தும் அவசியமான ஒரு தீர்வாகும். அதிகாரப் பகிர்வு மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியும். வெறுமனே ஒரு சாராரின் கருத்துக்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்பட முடியாது. இத்தனை காலமாக நாட்டில் சிக்கல் நிலைமைகளை உருவாக்கவும் இதுவே அடிப்படை காரணமாக அமைந்தது.
எனவே அதிகாரப் பகிவை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் முழுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. எவ்வாறு இருப்பினும் ஒற்றையாட்சிக்குள் 13ஐ நடைமுறைப்படுத்துவோம். அதன் மூலம் நல்லாட்சியை பலபடுத்தமுடியும் என ஆழமாக நம்புகின்றோம்.
மேலும் மதத் தலைவர்களின் ஆலோசனைகளை நாம் வினவியுள்ளோம். இவ்வாறான ஒரு அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்வதில் முதலில் பெளத்த மாநாயக தேரர்களின் அனுமதியையும் ஏனைய மத தலைவர்களின் அனுமதியையும் பெற்றுள்ளோம். ஆகவே நாட்டின் அடையாளம் எந்தவொரு சந்தர்பத்திலும் அழியப்போவதில்லை.
இது குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் எமக்கென்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. கட்சியின் தீர்மானத்திற்கு அமையவே எமது நகர்வுகளும் அமையும். எனினும் இப்போது ஏற்படுத்தியுள்ள இணக்கப்பாட்டு அரசியலில் பிரதான இரண்டு கட்சிகளும் முக்கிய விடயங்களில் இணக்கப்பாடுடன் செயற்படவேண்டிய தேவை உள்ளது.
எனவே அரசியலமைப்பு திருத்தும் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த ஒன்பது திருத்தங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோல் கடந்த வாரங்களில் பிரதான இரண்டு கட்சிகளுடன் ஜே.வி.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்த முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப் பினர் சுமந்திரனும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இதன் போதும் அனை வரும் ஏகமனதான நிலைப்பாட்டில் உள் ளமை தெரியவந்தது.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அரசியலமைப்பு திருத்தத்தில் அதிகளவில் அக்கறை காட்டுகின்றனர். எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பிரதான இரண்டு கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்திய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரதான இரண்டு கட்சிகளும் பேச்சுவதை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பகிர்வு விடயத்தில் உள்ள ஏனைய சிக்கல் தொடர்பில் தமிழர் தரப்புடன் பேச தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.