அதிகார பகிர்வு குறித்து ஆராய வடக்கில் விசேட குழு
புதிய அரசியல் யாப்பில் அதிகார பகிர்வு குறித்து ஆராய வடக்கு மாகாண சபை குழுவொன்றை அமைத்து, அந்தக் குழுவின் மூலமாக பரிசீலனை செய்து மக்களின் தேவைகள் அல்லது அபிலாஷைகளை முன்வைக்கின்ற செயன்முறையை ஏற்படுத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.
இதன்போது, வினைத்திறனுடைய மாகாண சபை செயன்முறை, தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுதல் மற்றும் அதிகார பகிர்வு யோசனை விடயத்தில் வடக்கு மாகாண சபை பங்குபற்றுதல் ஆகிய மூன்று விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, அதிகார பகிர்வு குறித்து எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வின்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் குழுவொன்றை அமைத்து அவ்விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுமென வடக்கு மாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.