Breaking News

ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி - காணாமல் போனோரின் உறவினர்களும் கூட்டமைப்பின் சந்திப்பில் பங்கேற்பு

காணாமல் போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட சந்திப்பில் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படவேண்டிய தமிழர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்ற போது, கூட்டம் நடைபெறும் கூட்டுறவு மண்டபத்தில் அண்மித்த பகுதியில் காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன்போது அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதுடன், பொலிஸார் அதனை கடுப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காணாமல் போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடிப்பதற்கு கூட்டமைப்பு போதிய அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும், அரசியல் தீர்வு விடயத்தில் காணாமல் போனோர் குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.