ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம் - சம்பந்தன்
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றிய சம்பந்தன், இதனைத் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே சமஷ்டிக் கோட்பாட்டை தந்தை செல்வா தலைமையில் முன்வைத்ததாகவும் அதனையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவையெனவும் இதன்போது குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை குறித்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, காணாமல் போன உறவுகளால் அங்கு ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.