வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் – மைத்திரியிடம் விளக்கம் கோருவார் மனித உரிமை ஆணையாளர்
வரும் வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோரவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், வரும் 5ஆம் நாள் இரவு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு வந்த மறுநாளான வரும் 6ஆம் நாள் சனிக்கிழமை, செயிட் ராட் அல் ஹுசேன் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் ஏனையவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
இதன்போது போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பியதும் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்தித்துப் பேசுவார்.
அதன் பின்னர், கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.தனது பயணத்தின் முடிவில் வரும் 9ஆம் நாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்துவார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது திட்டங்களை இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் விளக்கிக் கூறவுள்ளது.
அதேவேளை, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விளக்கம் கேட்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்றும், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என்றும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், இதுபற்றிய இலங்கை அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை, குறித்தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.