பரபரப்பான சூழலில் இன்று கிளிநொச்சியில் கூடுகிறது கூட்டமைப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்கு மாகாணசபைகளில் அங்கம் வகிக்கும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், முதல்முறையாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.பல்வேறு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான சர்ச்சைகள், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம், புதிய அரசியலமைப்பு வரைவு, போன்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படும் பரபரப்பானஅரசியல் சூழலில் இந்தக் கூட்டம் நடக்கவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக சூடான விவாதங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளார்.