ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் - ஐ.நா. அதிகாரி வலியுறுத்து
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இல்லாதொழிக்கப்பட்டு அதன் சகல கோப்புகளும் பதிவுகளும் ஆதாரங்களும் உத்தேச காணாமல் போனோர் தொடர்பான புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்தும் பரிந்துரையை இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஏரியல் டுலிட்ஸ்கீ வழங்கியுள்ளார்.
சட்டப் பேராசிரியரும் மனித உரிமைகள் பணிப்பாளருமான டுலிட்ஸ்கீ ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு இதனைத் தெரிவித்திருக்கிறார். ஆணைக்குழு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற தெளிவான பரிந்துரையை இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. செயற்குழு வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையை காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய செய்திகள் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“எமது பரிந்துரையை கவனத்துக்கு எடுக்கும் அறிகுறியை இதுவரை அரசாங்கம் காண்பிக்கவில்லை. ஆனால் சாத்தியமான அளவுக்கு விரைவாக அரசாங்கம் செயற்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். எமது பரிந்துரைகளை அரசாங்கம் உள்ளீர்க்குமென நாம் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
“ஜனாதிபதி ஆணைக்குழுவை நீக்கிவிட வேண்டுமென எமது அறிக்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது. காணாமல் போனோர் தொடர்பாக கையாளப்பட்ட சகல விடயங்களையும் நம்பகரமானதும் சுயாதீனமானதுமான நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமென பரிந்துரைத்திருந்தது. காணாமல் போனோரின் குடும்பங்களுடன் நெருக்கமான கலந்துரையாடல்களை மேம்படுத்த வேண்டுமென கோரியிருந்தது’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் மனிதாபிமான இலக்கில் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக இங்குள்ள (இலங்கையில்) ஐ.நா. குழு புகழ்ந்திருந்தது. காணாமல் போனோரின் புதிய அலுவலகம் அவர்களின் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
ஐ.சி.ஆர்.சி.யின் ஆதரவுடன் உயர்மட்ட தொழில்நுட்ப, தொழில்சார் நிபுணத்துவம் கொண்ட, பாரபட்சமற்ற, பக்கசார்பற்ற, சுயாதீனமான விசாரணையை காணாமல் போனோருடன் தொடர்புபட்ட சகல விடயங்கள் தொடர்பாகவும் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் பரிந்துரைத்திருந்தார். குறிப்பாக அந்த நிறுவனமானது பாதிக்கப்பட்டோரை மையப்படுத்திய அணுகுமுறையை உள்வாங்க வேண்டுமெனவும் அதன் மூலம் தமது அன்புக்குரியவர்களை தேடிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டோரின் தேவைகளுக்கு பதில் அளிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் காணாமல் போனோரின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டோரை மையப்படுத்திய நிறுவனத்துடன் முழுமையாக கருமமாற்றக்கூடியதாக இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம 2016 பெப்ரவரி 15 வரை இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்வார் எனவும் கூறியுள்ளார். ஐ.நா. செயற்குழுவின் அறிக்கை வெளிப்படைத் தன்மையை குறைவாகக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தமது கண்டுபிடிப்புகள் தொடர்பான அறிக்கையை உத்தியோகபூர்வமான ஐ.நா செயற்குழு 2016 செப்டெம்பரில் வெளியிடும் என பேராசிரியர் டுலிட்ஸ்கீ கூறியுள்ளார்.