"யுத்தம் முடிவடைந்தாலும் நசுக்கப்பட்ட சமூகத்துக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை''
யுத்தம் முடிவடைந்தாலும் நசுக்கப்பட்ட சமூகத்திற்குரிய தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
சுமார் 23 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவினை அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது,
கொடிய யுத்தம் இடம்பெற்று அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சமூகங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவைப் பாடுகள் உள்ளன.இதற்காக இந்த மாகாணத்திலுள்ள பொதுமக்கள் என்று தொடங்கி அதிகாரிகள் அரசியல்வாதிகள் வரையிலும் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது.
இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து இந்த ஒத்துழைப்பு அவசியமாகின்றது.ஒற்றுமைப்பட்டு இந்த மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு இனவாதமில்லாத ஒருவர். அவர் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் இன ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்ற ஒரு சிறந்த அமைச்சர்.
அனைத்து வைத்திய சாலைகளுக்கும் அனைத்து வசதிகளும் தேவை என்பதை உணர்ந்து அதற்கு உதவுபவராக சுகாதார அமைச்சர் உள்ளார். எங்களது தேவைகளை உரிய முறைப்படி நியாயப்படுத்தி கோரி நிற்கின்றபோது அதனைப் பெறுவது இலகுவாக இருக்கும்.
இந்த மாகாணத்திற்கு அத்தனை வளங்களையும் முதலீடுகளையும் கொண்டு வருவதற்கான அத்தனை செயற்பாடுகளையும் எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது. தற்போதைய மாகாண சபையில் சகல இனத்தவர்களும் அங்கம் வகித்து அமைச்சுப் பொறுப்புகளையும் பெற்றிருக்கின்றார்கள். ஊழலில்லாத ஒரு சுத்தமான நிருவாகமாக தற்போதைய மாகாண சபை திகழ்கின்றது என்பது பெருமைக்குரிய விடயம். மக்களுக்குரிய சிந்தனையிலேயே தற்போதைய மாகாண நிருவாகம் உள்ளது என்றும் கூறினார்.