வடமாகாண சபையில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்! நயினாதீவு பெயரை மாற்றும் முயற்சிக்கும் எதிர்ப்பு
வடமாகாண சபையின் 37 ஆவது நேற்றைய அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபை கட்டடத்தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் 10 பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு 9 பிரேரணைகள் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒரு பிரேரணை அடுத்த அமர்வு வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தினால் முதலாவது பிரேரணையாக நயினாதீவு பெயர் மாற்றம் தொடர்பில் கொண்டுவரப்பட்டது. அதற்கமைய வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு என்ற தமிழ் பெயரை நாகதீபம் என வரலாற்றைத் திரிவுபடுத்தும் நடவடிக்கை கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும். குறிப்பாக வட்டாரம் 8 நாகதீபம் வடக்கு எனவும் வட்டாரம் 12 நாகதீபம் தெற்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இரண்டு வட்டாரங்களின் பெயர்களையும் அவற்றுள் உள்ளடக்கப்பட்டுள்ள கிராம அலுவலர்கள் பெயர்களையும் நயினாதீவு எனும் பெயர் கொண்டு வர்த்தமானிப் பிரகடனத்தில் உடனடி மாற்றம் செய்யவேண்டும் என ஜனாதிபதியையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரையும் இச் சபை கோருகின்றது. இவ்வாறு அவைத்தலைவரால் பிரேரணை முன்வைக்கப்பட்ட நிலையில் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குமரபுரம் மற்றும் குமுழமுனைக்கிராம கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஐந்நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருகின்றமை அதிகாரிகளால் ஏன் கண்டுகொள்ளப்படவில்லை-? காடுகளை அழித்து அரசியல் செல்வாக்குகளின் அடிப்படையில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைகள் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரை கோருகின்றேன் என வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
குறித்த பிரேரணை தொடர்பில் ஒரு சில உறுப்பினர்களிடையே எதிர்மறையான கருத்துக்கள் சபையில் விவாதமாக முன்வைக்கப்பட்டன.
அதற்கமைய காடுகளை நாங்கள் அழிக்கவில்லை. எங்கள் காணிகளில் வளர்ந்திருந்த பற்றைகளையே வெட்டினோம். பற்றைகளை வெட்டும்போது சில மரங்கள் வெட்டப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களினால் பதில் வழங்கப்பட்டது.
இதற்கு கருத்துரைத்த மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு- குமுழமுனை பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டுவருவது உன்மை. அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பில் உறுப்பினர்களுக்கிடையே மேலும் விவாதம் இடம்பெற்ற நிலையில் இந்த மாதம் 19 ஆம் திகதி கூடவுள்ள வடமாகாண சபை அமர்வில் குறித்த பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவைத்தலைவரால் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது.