யுத்தத்தின் பின்னர் வடமாகாணம் கைவிடப்பட்டது : பிரதமர்
மஹிந்த அரசாங்கத்தினால், பாரியளவில் பிரசாரம் செய்யப்பட்ட ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம்’ பிரசார நாடகமேயன்றி வட மாகாண மக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கு துணைபோகவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்தும் வட மாகாணத்தின் உற்பத்தி பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 வீதம் மாத்திரமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மற்றும் அதை அண்டிய பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2016 ஆம் ஆண்டில் உதவி மாநாடு ஒன்றை கூட்டுவது சம்பந்தமாக நாம் ஜப்பானுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு விஷேட திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரசித்திபெற்ற சர்வதேச சஞ்சிகையான யுரோமனி சஞ்சிகையின் அனுசரணையுடன் பொருளாதார மாநாடொன்றை எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் இலங்கையில் நடத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று ஆற்றிய விசேட உரையின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.