நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களே அமெரிக்க பிரேரணையை எதிர்க்கின்றனர்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டை பாதுகாப்பதற்காக ஜெனிவாவில் யாருக்கும் நாம் அடிபணியவில்லை.
ஜனநாயகத்திலிருந்து பொறுப்புகூறலை நாம் வேறுபடுத்தி செயற்படவுமில்லை. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரினார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் உண்மைகளைக் கண்டறிய வேண்டும். தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய தருணம் இதுவாகும். அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றவர்கள் நாட்டை பிளவுபடுத்த முனையும் அடிப்படைவாதிகளாவர். இவர்களுடன் விவாதம் புரியவேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஊழியர் சங்க பிரதிநிதிகளை நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் வைத்து சந்தித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கையின் விடயதானங்கள் தொடர்பில் அனைத்து நாடுகளுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு கடந்த காலங்களில் எதிராக வாக்களித்தவர்கள் இம்முறை ஆதரவளிக்க தொடங்கியுள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான செயற்பாடுகளின் காரணமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை பிளவுபட்டது. இலங்கைக்காக மனித உரிமை பேரவை பிளவுபடுவதனை நாம் விரும்பவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
இலங்கைக்காக தற்போது மனித உரிமை பேரவை ஒன்றுபட்டுள்ளது.
இலங்கையை பாதுகாப்பதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஜெனிவாவில் யாருக்கும் அடிபணியவில்லை. நாம் யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியமும் கிடையாது. நாம் அடிபணிய வேண்டியது நாட்டு மக்களுக்கேயாகும். அவர்களே உண்மையில் பலம் பொருந்தியவர்களாவர்.
மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதிலேயே ஜனநாயகம் தங்கியுள்ளது. நாம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்தமையினால் ஜனநாயகத்தை நிலைநாட்டினோம். அதனூடாக உள்ளக பொறிமுறை ஒன்றை உருவாக்கினோம். தற்போது தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய தருணம் எமக்கு கிடைத்துள்ளது.
சர்வதேசத்தில் இலங்கைக்கு சாதகமான நிலைமை தோன்றியதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையும் விரைவில் எமக்கு கிடைக்க பெறும். இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் எழுதவுள்ளார். இதனூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் எமது வேலைத்திட்டத்தை செயற்படுத்த இலகுவாக இருக்கும்.
நாம் மக்களின் அபிலாஷைக்கு என்றும் மதிப்பளித்தே செயற்பட்டோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மக்களின் அபிலாஷைக்கு மாறாக செயற்பட்டமையினாலேயே இவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
நாம் எந்த சந்தர்ப்பத்திலும் பொறுப்புகூறலில் இருந்து ஜனநாயகத்தை வேறுப்படுத்தவில்லை. ராஜபக்ஷ அரசாங்கம் பொறுப்புக்கூறலில் இருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்தி செயற்பட்டமையினால் தான் இலங்கை இந்த நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
முன்னைய அரசாங்கம் தருஷ்மன் குழுவிற்கும் சர்வதேசத்திற்கும் அரசின் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவாக கூறவில்லை. உள்ளக விசாரணையை முன்னெடுப்பதா அல்லது சர்வதேச விசாரணையா என்பது தொடர்பில் அரசு மௌனம் காத்தது.
பொறுப்புகூறலில் இருந்து வேறுபட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவையும் நியமித்து மனுக்களை விசாரிப்பதில் மாத்திரமே குறியாக இருந்தது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் உண்மை கண்lறியப்பட வேண்டும்.
யுத்தத்தின் போதும் அதன்பின்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது. இதனை கண்டறியவே சட்டவல்லுநர்களுடனான விசேட காரியாலயம் நிறுவப்படவுள்ளது.
இது தொடர்பிலான மனுக்களை விசாரிப்பதா இல்லையா என்பதனை மதத்தலைவர்களுடனான கருணை சபை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும். அந்த முறைமையின் பிரகாரமே உள்ளக பொறிமுறை முன்னெடுக்கப்படும்.
இந்நிலையில் நாட்டை நாம் பாதுகாத்துள்ளோம்.
சர்வதேசத்தின் மத்தியில் நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர்களினால் நாட்டை பாதுகாக்க முடியவில்லை. அதனாலேயே இதற்கான பொறுப்பை மக்கள் என்மீது ஒப்படைத்தனர்.
அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றவர்கள் நாட்டை பிளவுபடுத்த முனையும் அடிப்படைவாதிகளாவர்.
அடிப்படைவாதிகள் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றனரா? அல்லது உள்ளக பொறிமுறையை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றனரா? நாட்டை பிளவுபடுத்தவே எதிராக குரல் கொடுக்கின்றனர்.
அனந்தி சசிதரன், தயான் ஜயதிலக்க மற்றும் சிங்கள ஆடை அணிந்து வேஷம் போடுவோர்
நாட்டை பிளவுபடுத்தவே முனைகின்றனர்.
இவர்களுடன் விவாதம் புரியவேண்டிய தேவையில்லை. நாம் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுபடுத்துவற்கு விரும்பவில்லை என்று தெரிவித்தார்.