Breaking News

விசாரணை நம்பகமானதாக இருப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் முக்கியம் – சில்வியா கார்ட்ரைட்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார் நியூசிலாந்தின் நீதிபதியான சில்வியா கார்ட்ரைட்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த மூவரில் ஒருவரான, சில்வியா கார்ட் ரைட் அம்மையார், கம்போடியாவில் கெமர்ரூஜ் கால போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவராவார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

இந்த செயல்முறை இலங்கையிலும் உலகின் பிற பகுதிகளிலும், நம்பத் தகுந்ததாக அமைய வேண்டுமானால், அனைத்துலக பாத்திரங்களின் பங்களிப்பு முக்கியமானது. மிகவும் மக்கியத்துவமான விடயம், ஒரு நீதிமன்ற அமைப்பை உருவாக்குவது தான். அந்த நீதிமன்றம், சுதந்திரமானதாக இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

இந்த தீர்ப்பாயத்தில் வெளிநாட்டவர்கள் ஒரு பகுதியாக இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.இலங்கையில் உருவாக்கப்படும் நீதிமன்றம் இலங்கை மற்றும் அனைத்துலக வழக்குத் தொடுனர்கள் மற்றும் நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.வெளிநாட்டு நிபுணர்களால் சாட்சிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.