60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விடுதலை?
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுமார் 60 அரசியல் கைதிகள், அடுத்த மாதம் முற்பகுதியில் விடுவிக்கப்படுவார் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள், தம்மைப் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று கோரி, கடந்த திங்கட்கிழமையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
ஆறு நாட்களாக போராட்டம் நடத்திய அவர்கள், நேற்று ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
அடுத்த மாதம் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி குறித்து நேற்று மகசின் சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.
இதையடுத்து ஜனாதிபதி தமது வாக்குறுதியை நிறைவேற்ற காலஅவகாசம் அளிக்கும் வகையில், தமது போராட்டத்தை் வரும் 7ஆம் நாள் வரை இடைநிறுத்த அரசியல் கைதிகள் தீர்மானித்தனர். இந்த நிலையில், குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 60 அரசியல் கைதிகள் அடுத்தமாதம் முதல் வாரத்தில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீதுான வழக்குகளை விலக்கிக் கொள்வது, தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட சாத்தியப்பாடுகள் குறித்தும், அரசாங்கத் தரப்பில் ஆராயப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள், குறிப்பிட்ட கால புனர்வாழ்வுக்கு அனுப்பப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.