இந்திய வீடமைப்புத் திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார் கிளிநொச்சி பங்குத் தந்தை
இந்திய வீடமைப்புத் திட்ட உதவிகளைப் பெறுவதில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக, தாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் அதிகாரிகளுக்குப் பலமுறை கடிதங்களை அனுப்பியதாக, கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள அதிகாரிகள் கொடுப்பனவை வழங்காமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக, தாம் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
”இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இந்த கொடுப்பனவை 550,000 ரூபாவாக மட்டுப்படுத்தியிருக்கிறது.
ஒதுக்கப்பட்ட நிதிக்குள் வீடுகளை கட்டுவது மிகவும் கடினம். கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தில் இருந்து கட்டடப் பொருட்களை வாங்கியதற்கான பற்றுச்சீட்டை சமர்ப்பிக்குமாறு. செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பயனாளிகளிடம் கூறுகின்றனர்.
சிலவேளைகளில் பணக் கொடுப்பனவு சிட்டைகள் பயனாளிகளிடம் கூட் வழங்கப்படாமல், நேரடியாகவே வர்த்தக நிலைய உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றும் கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் தெரிவித்தார்.