விசாரணை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல் இடம்பெறுகிறது : மஹிந்த
விசாரணைகள் என்ற பெயரில் தற்போது முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சிக்கு தேர்தல் விளம்பர கட்டணங்களை செலுத்தத் தவறியமை குறித்த விசாரணைக்காக இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சென்ற மஹிந்த, ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் மஹிந்த குறிப்பிடும்போது-
‘ஏதோ பாரிய குற்றங்களை செய்ததாக எம்மை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் எனக்கு தெரிந்த அளவில் குறித்த கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதோடு, சுயாதீன தொலைக்காட்சி அதுகுறித்து கடிதமும் அனுப்பியுள்ளது.
இதனை வைத்து பார்க்கும்போது, இது முற்றமுழுதாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் நான் கட்சியின் வேட்பாளர் மட்டும்தான். கொடுக்கல் வாங்கள் குறித்து ஏதேனும் இருந்தால் அதனை கட்சியுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எவ்வாறெனினும், இவை குறித்து விசாரிப்பதற்கு இந்த ஆணைக்குழுவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லையென்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். இதற்கு பிறகு விசாரணை நடைபெறுமா இல்லையா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்’ என குறிப்பிட்டார்.