விக்கிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிங்கள ஊடகங்களின் புனைகதை! மாவை கூறுகின்றார்
வடமாகாண சபையூடாக மக்கள் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது மேலும் வடமாகாண சபையின் சுமுகமான செயற்பாடுகள் என்பவை தொடர்பில் விரைவில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.
மேலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துவருவதாக சிங்கள வாராந்தப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் உண்மை தன்மை உள்ளதா? என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த செய்தியில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. அவ்வாறு எவரும் பேசவில்லை. சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்களிடையே திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயற்படுகின்றன. அவை தொடர்பில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
வடமாகாண முதலமைச்சர் விக்ணேஸ்வரன் அண்மையில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். விரைவில் நாம் சந்தித்துப் பேசி எதிர்கால திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவோம். எம்மிடையே எந்த விதமான பிளவுகளும் கிடையாது. அது குறித்து தமிழ் மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றார்.
இதேவேளை, வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள குறித்த சிங்கள வாராந்தப் பத்திரிகை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு முரணாகவும் தன்னிச்சையாகவும் வடமாகாண முதலமைச்சர் செயற்படுவதாகவும் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்காமல் மௌனமாக இருப்பதாக கூறி கஜேந்திர குமார் பொன்னம்பலம் அணிக்கு மறைமுகமாக ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ளது.