இராணுவத்தினருக்கு கோத்தா உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது சட்டவிரோதம் – பொன்சேகா
இலங்கை இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்கு, ஜெனிவா தீர்மானம் காலஅவகாசத்தை அளித்தி ருப்பதாகத் தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், ‘போரை சட்டபூர்வமாக நடத்தியதால், நான் விசாரணைகளுக்கு அஞ்சவில்லை.ஜெனிவாவுக்கு சென்று யாரும் குற்றச்சாட்டுகளை முன் வைக்க முடியும். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூட அங்கு சென்றிருக்கிறார்.
எமக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்க ஜெனிவா தீர்மானம் மூலம் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. போருக்குத் தாமே உத்தரவு வழங்கியதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் போரில் அதிக பங்களிப்பு செய்தது நானே. தேவையான உத்தரவுகள், மாற்றங்கள், பயிற்சிகள், திட்டமிடல்கள் என்பவற்றை மேற்கொண்டேன்.
உலக சம்பிரதாயங்களுக்கு அமைவாக போரை சட்டபூர்வமாக முன்னெடுத்தேன்.போரை வேறு எவராவது வழிநடத்தியதாக கூறினால் அது சட்டவிரோதமான செயலாகும்.பாதுகாப்புச் செயலரால், இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்க முடியாது.
தான் இராணுவத்தினருக்கு உத்தரவு வழங்கியதாக பாதுகாப்புச் செயலர் கூறியிருந்தால் அது சட்டவிரோதமான செயல்.உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் கைதிகளுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி.க்கு எதிராக குற்றச்சட்டுக்கள் கிடையாது என சட்டமா ஜனாதிபதி திணைக்களம் அவரை விடுவிக்கிறது.
பெரும் சுறாக்களை விட்டு விட்டு மறுபக்கம் சிறு குற்றங்களுடன் தொடர்புள்ள ‘நெத்தலி மீன்களை’ பிடித்து ஆண்டுக்கணக்கில் தடுத்து வைத்துள்ளார்கள். இவர்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.