ஜெனிவா விரைகிறது கூட்டமைப்பு - சுமந்திரன் தலைமையில் விசேட குழு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளரும் தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.
அதேவேளை, வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக ஜெனீவா செல்லவுள்ள இவ்விரு குழுவினரும் அங்கு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகவும் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளதோடு அதற்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணை அறிக்கை வௌியிடப்படவுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தரப்பில் வெ ளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலாக விசேட குழுவினரும் குறித்த அமர்வில் பங்பேற்பதற்காக ஜெனீவா செல்லவுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாணசபை, உட்பட இதர தமிழ் தேசிய சக்திகள், சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என புதிய அரசாங்கம் உட்பட பெரும்பான்மை அரசியல் தரப்புக்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளன.
தற்பொழுது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமையப்பெற்றுள்ள நிலையில் குறித்த சர்வதேச விசாரணை அறிக்கையானது சர்வதேச விசாரணையையா அல்லது சர்வதேச நியமனங்களின் கீழான உள்ளக விசாரணையையா அல்லது சுயாதீன உள்ளக விசாரணையையா வலியுறுத்தப்போகின்றது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறிருக்கையில் பொதுத்தேர்தல் நிறைவடைந்து பாராளுமன்ற கன்னி அமர்வு கூட இடம்பெற்றிருக்காத நிலையில் அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தார்.
அத்துடன் அவரது பயணத்தின் இறுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை வெ ளியிடப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணையையொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.