புதிய அரசியல் கலாசாரத்தை பின்னகர்த்த சிலர் சதித்திட்டம் - ஜனாதிபதி
புதிய அரசியல் கலாசாரத்தை பின்னகர்த்துவதற்கு சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். எமது எதிரி யார் என்பது யாவருக்கும் தெரியும். ஆகையால் எதிரி பலவீனமானவர் என்று ஏளனமாக எவரும் நினைக்கக்கூடாது.
தேசிய அரசாங்கத்தினூடாக எமது பயணத்தை பின்னகர்த்த முனையும் சதித் திட்டத்தை முறியடிக்க அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கைவிடுத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாட்டின் நிர்வாகத்தை கொண்டு செல்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன். இரண்டு கட்சிகளும் பிளவுப்பட்டது போதும். இந்த இரண்டு தரப்பினரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். கருத்தொருமைப்பாட்டு அரசியலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்னை ஜனாதிபதி கதிரைக்கு அமர்த்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஆகவே என்மீது நம்பிக்கை வையுங்கள். நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் 69 நிறைவாண்டு விழா நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த நிகழ்வின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்து 69 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதன்பின்பு ஐந்து வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன்பிரகாரம் இந்த இரண்டு கட்சிகளுமே நாட்டை இதுவரை காலம் மாறி மாறி ஆட்சி செய்தன.
இந்நிலையில் தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முனைகின்றோம்.இரண்டு கட்சியினரும் எதிர்கட்சியாக இருக்கும் போது ஒன்றையொன்று விமர்சித்து ஆர்ப்பாட்டங்களிலும் வேலைநிறுத்தங்கள் போன்ற போராட்டங்களிலும் ஈடுப்பட்டு பல உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காகவே கருத்தொருமிப்பு அரசியலைக் முன்னெடுப்பதற்காக தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி என்ற வகையில் நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மாத்திரம் ஒன்றிணைவதனால் நாட்டில் மாற்றம் ஏற்படாது. அதற்கு மாறாக அமைச்சர்களும் கிராம மட்டத்தில் இரண்டு கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும்.
இந்நிலையில் ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பிக்கபட்ட கருத்தொருமிப்பு அரசியலை கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் எமது பயணத்தை பின்நகர்த்துவதற்கு சிலர் சதி செய்து வருகின்றனர். இதனை கண்டு எவரும் அஞ்சத்தேவையில்லை. அனைவரும் எமது பயணத்திற்கு ஆதரவு நல்க வேண்டும்.
தேசிய அரசாங்கம் தொடர்பில் கிராம புறங்களில் மக்கள் போதியளவு தெளிவற்றவர்களாக காணப்படுகின்றனர். ஆகவே இது தொடர்பில் கிராம மட்டத்தில் நாம் தேசிய அரசாங்கம் தொடர்பில் அறிவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்நிலையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தும் எமது பயணத்தை முறியடிப்பதற்கு முன்னெடுக்கப்படும் சதி திட்டத்தை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாம் எதிரிகளுடன் போர் தொடுக்கும் போதும் மிகவும் நுணுக்கமாக செயற்படவேண்டும்.
எமது எதிரிகள் யார் என்பதனை யாவரும் அறிவீர்கள். எதிரிகளை நாம் ஒருபோதும் ஏளனமாக மதிப்பிட கூடாது. அவர்களை பலவீனமானவர்கள் என்றும் எண்ணக்கூடாது. இது குறித்து நாம் அவதானத்துடன் செயற்படவேண்டும். எதிரிகள் எப்போது வீறுகொண்டு எழுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆகவே கருத்தொருமிப்பு அரசியலின் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் எமது பயணத்தை நிதானமான முறையில் முன்னெடுக்கவேண்டும்.
என்னை ஜனாதிபதி கதிரையில் அமரவைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய ஒத்துழைப்பை நான் என்றும் மறக்கமாட்டேன். என்னுடைய வெற்றிக்காக பலர் உயிர்களை தியாகம் செய்தனர். ஆகவே எந்தகாரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் இழைக்க மாட்டேன். என்மீது உறுதியான நம்பிக்கை வைத்து செயற்படுங்கள்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாட்டின் நிர்வாகத்தை கொண்டு செல்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன். இரண்டு கட்சிகளும் பிளவுப்பட்டது போதும் இந்த இரண்டு தரப்பும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். கருத்தொருமைப்பாட்டு அரசியலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கும் என்பதனை நான் உறுதியாக கூறுகின்றேன்.
ஆகவே நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய நாட்டை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.