உள்நாட்டிலேயே விசாரணை! இலங்கைக்கு இந்தியா ஆதரவு
போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி உள்நாட்டிலேயே விசாரணை நடத்தும் விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு தெரி வித்து உள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக போர் நடைபெற்று வந்தது.
இனப்படுகொலை
இந்த உள்நாட்டு போர் கடந்த 2009–ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, போர் இல்லா பிரதேசங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
உலகில் வேறு எங்கும் நடந்திராத அளவுக்கு மனித உரிமைகள் மீறப்பட்டன. போரின் இறுதிக்கட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதே போன்று விடுதலைப்புலிகள் மீதும் இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டுக்களை கூறியது.
ஐ.நா. விசாரணை
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை ஒன்றை நடத்தி, அதன் வரைவு அறிக்கையை சமீபத்தில் ஜெனீவாவில் வெளியிட்டது.
அதில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி சிறிசேனா அரசு இதை ஏற்கவில்லை.
அமெரிக்கா தீர்மானம்
இதற்கிடையே ஜெனீவாவில் கூடியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30–வது அமர்வில், அமெரிக்கா வரைவு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு அமெரிக்காவுடன் இங்கிலாந்து, மாசிடோனியா, மான்டிநீக்ரோ நாடுகள் துணை போய் உள்ளன.
இதில் இலங்கைக்கு ஆதரவான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி, சர்வதேச அளவில் தமிழ் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கின்றன.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு நீதிபதிகள் குழு ஒன்றை அமைத்து இலங்கை அரசே விசாரணை நடத்தலாம் என்றும், இந்த விசாரணை குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளும் இடம்பெற வேண்டும் என்றும் அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
மோடி–சிறிசேனா சந்திப்பு
இந்த நிலையில், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவும் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் மனித உரிமைகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விவாதங்கள் குறித்து பேசிக்கொண்டனர்.
இலங்கையில் 2 தேர்தல்களை நடத்தி முடித்ததற்காக ஜனாதிபதி சிறிசேனாவை பிரதமர் மோடி பாராட்டினார். இந்த தேர்தல்கள் ஜனநாயக கலாசாரத்தின் ஆணிவேரையும், ஜனநாயகத்தின் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.
நல்லிணக்க நடவடிக்கைகள்
இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவருப், நியூயார்க்கில் நேற்று செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் மோடி, இலங்கை ஜனாதிபதி சிறிசேனா சந்திப்பின்போது, நல்லிணக்க நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர். இந்த நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னோக்கி நடைபோடும் என்று சிறிசேனா கூறினார்.
இலங்கையில் ரெயில்வே, உள்கட்டமைப்பு, மின்சாரம், வீட்டு வசதி திட்டங்களை நிறைவேற்றுவது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா வழங்கி உள்ளது. அடுத்த ஆண்டு அங்கு (போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு) 46 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என நம்புகிறோம்.
மாற்றம்
இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தனது ஈடுபாட்டினை செலுத்தி வருகிறது. அந்த தீவு நாட்டில் புதிய அரசு அமைந்த பின்னர், மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. நாங்கள் நீதிக்காக நிற்கிறோம். அதே நேரத்தில் இலங்கையின் இறையாண்மை விவகாரங்களை மதிக்கிறோம். இந்த இரு அம்சங்களையும், நோக்கங்களையும் சந்திக்கிற அளவில் ஒரு வழிவகை காணப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
ஒருமனதாக நிறைவேறும்
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற அம்சத்தை பொறுத்தமட்டில், வரைவு தீர்மானத்தின் இறுதி வடிவத்தை நாங்கள் ஆராய்ந்த பின்னர்தான் கருத்து கூற முடியும். அதே நேரத்தில் அது கருத்தொற்றுமையுடன் கூடியதாகவும், இலங்கை அரசினால் ஏற்கத்தக்கதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அது அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றக்கூடியதாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா ஆதரவு
இதன் மூலம், இலங்கைக்கு ஆதரவான அம்சங்களை கொண்டுள்ள அமெரிக்காவின் வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்பதை வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவருப் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
வரும் 30–ந் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா தனது இறுதி தீர்மானத்தை தாக்கல் செய்யும். இந்த தீர்மானத்தை இலங்கை வழிமொழியும் என தகவல்கள் கூறுகின்றன.
தலைவர்களுடன் மோடி சந்திப்பு
பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லாப்வென், சைப்ரஸ் ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தாசியாடெஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோரையும் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.