அமெரிக்க பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் : அரசாங்கம்
இலங்கை குறித்த அமெரிக்காவின் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படுமென, இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை எதிர்வரும் (புதன்கிழமை) ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே அதுகுறித்த விவாதமும் நடைபெறவுள்ளதோடு, குறித்த விவாதத்தின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துகொள்வார்.
முன்னதாக 26 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட யோசனையானது இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பு மற்றும் பலதரப்பினருடனான கலந்துரையாடல்களையடுத்து 20 அம்ச கோரிக்கைகளுடன் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த யோசனையானது பெரும்பாலும் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ள நிலையில், இதனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.