சர்வதேச விசாரணை பற்றி இந்தியப் பிரதமர் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்!
இலங்கை போர் குற்றம் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய பிரச்சினையில் இந்தியப் பிரதமர், உரிய நேரத்தில் முடிவு எடுப்பார் என அந்த நாட்டின் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை தமிழர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அங்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின்படி 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் அங்குள்ள தமிழர்கள் சமஉரிமை, அந்தஸ்துடன் வாழ முடியும். எனவேதான் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து இப்போது தெரிவிக்க முடியாது. தகுந்த நேரத்தில் பிரதமர், சரியான முடிவை எடுப்பார்.
இந்திய மீனவர்கள் பிரச்சினையிலும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.