Breaking News

இலங்கையின் மரண சான்றிதழ் மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம்தானாம்!

'இலங்கைக்கு உயிரூட்டுவோம், புதிதாக ஆரம்பிப்போம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டின் மரண சான்றிதழ் என்பதை மக்கள் எக்காரணம் கொண்டும் மறந்துவிடக்கூடாது' என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இதுவரை காலமும் நாட்டை அழித்துவிட்டு மீண்டும் இவர்கள் எதனை உயிரூட்டப்போகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறியவை வருமாறு:- 

"ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படமும் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேடிக்கையான விடயமாகும். தமது தோல்வி உறுதியானமை தெரிந்ததாலேயே மஹிந்த தரப்பினர் மைத்திரியின் படத்தை தற்போது பயன்படுத்துகின்றனர். 

இல்லையெனில், இவ்வளவு காலமும் ஜனாதிபதியையும், அவரின் அரசையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது ஏன் இவ்வாறு திடீரென மாற்றமடையவேண்டும்? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 'நாட்டுக்கு உயிரூட்டுவோம் புதிதாக ஆரம்பிப்போம்' என்ற பெயரின் எதிர்காலத்திற்கான சான்றிதழ் (விஞ்ஞாபனம்) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இது நாட்டின் மரண சான்றிதழ் என்பதை மக்கள் எக்காரணம் கொண்டும் மறந்துவிடக்கூடாது. 

இத்தனைக் காலமும் நாட்டை அழித்துவிட்டு மீண்டும் இவர்கள் எதனை உயிரூட்டப்போகிறார்கள்? ஆகவே, ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தையே மக்கள் இந்தத் தேர்தலிலும் உறுதியாக நிலைநாட்டவேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நாடாளுமன்றுக்கு நுழைந்தாலும் அவருக்கு ஒருபோதும் பிரதமர் பதவி மட்டும் வழங்கப்படவே மாட்டாது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சட்டத்திட்டங்களுக்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுக்கும் விடயத்தில் செயற்பட்டார். எனினும், பிரதமர் பதவி என்பது கட்சியின் சட்டதிட்டங்களில் அல்லாது நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் தெரிவுசெய்யப்படும். அரசமைப்பின் 42ஆவது உறுப்புரைறயில் இதுகுறித்து தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது குறித்த ஜனாதிபதியின் முடிவிற்குள் எவரும் தலையிடமுடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் பதவியை மஹிந்தவுக்கு வழங்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருக்கிறார். இதனால், எக்காரணம் கொண்டும் மஹிந்தவுக்குப் பிரதமர் பதவி கிடைக்காது'' - என்றார்.