மத்திய குழுவைக் கூட்டும் முகமாக ஜனாதிபதியைச் சந்திக்க சு.க.திட்டம்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்தக் கோரி அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த சந்திக்கவுள்ளனர்.
நாளை மறுதினம் புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை மீறி முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கட்சியின் மத்திய குழு கூட்டம் கூட முயன்றது.
ஆனால் இதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு விதித்தது.இந்த நிலையில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 22 பேர் கூட்டத்தைக் கூட்டுமாறு பொதுச் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர்.
இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜயந்தவும் கட்சித் தலைவரை சந்தித்து முடிவு ஒன்றை எடுக்கவுள்ளனர் எனத் தெரிகிறது.