சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்தனர்
இலங்கை வந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் நேற்று முதல் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் பொதுத்தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக 160 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.
இதில் அதிகளவானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுமார் 70 கண்காணிப்பாளர்கள் இவ்வாறு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவின் ஒரு தொகுதியினர் திங்கட்கிழமை இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் கண்காணிப்பு காரியாலயம் ஒன்றையும் அமைக்கவுள்ளது. இதற்கு மேலதிகமாக தேர்தல் கண்காணிப்பு மற்றும் தெளிவூட்டல் நடவடிக்கைளை மேற்கொள்ள மூன்று உள்ளூர் நிறுவனங்களுக்கு 1.2 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.