Breaking News

கிழக்கு மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு என்ன?

கிழக்கு தேர்தல் களத்தில் இம்­முறை என்­று­மில்­லா­த­வாறு, முன்னாள், இந்நாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், மாகாண சபை உறுப்­பி­னர்­களும் பொதுத் தேர்தல் எனும் போரில் இறங்­கி­யி­ருப்­பது




கிழக்கு மாகாண தேர்­தலை சூடு­பி­டிக்க வைத்­தி­ருப்­ப­துடன் வாக்­கா­ளர்­க­ளாகி பொது மக்­க­ளுக்கு அதிர்ச்­சி­யூட்டும் தேர்­த­லாக 15 ஆவது பாரா­ளு­மன்ற தேர்தல் ஆகி­யி­ருக்­கி­றது.

எந்த கட்­சியைச் சேர்ந்த எந்த வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பது, எக்­கட்­சிக்கு தமது ஆத­ரவை நல்­கு­வது யார் ஆற்றல் உள்­ள­வர்கள் யாருக்கு வாக்­க­ளித்தால் தமது பிர­தே­சமும் தாமும் நன்மை பெற முடியும், அனு­கூ­ல­மாக இருக்­கு­மென்ற தீர்­மா­னங்­களை எடுப்­ப­திலும் முடிவை அணு­கு­வ­திலும் கிழக்கு மாகாண மக்கள் ஒரு தர்ம சங்­க­ட­மான சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதே உண்மை. கடந்த 14 தேர்­தல்­க­ளிலும் அனு­ப­விக்­காத புதிய அனு­ப­வத்தை நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் கண்டு கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது அவர்கள் வாயி­லா­கவே சொல்­லப்­ப­டு­கின்ற விட­ய­மாகும்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களாக இருந்­த­வர்கள் அமைச்சர் பத­வியை வகித்­த­வர்கள், மாகாண சபை அனு­ப­வங்­களைக் கொண்­ட­வர்கள், தற்­பொ­ழுது மாகாண சபையை மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக அலங்­க­ரித்துக் கொண்­டி­ருப்­ப­வர்கள், உள்­ளூ­ராட்­சி­யா­ளர்கள் என்ற வகை­யிலும் பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட முடி­யாத அள­வுக்கு இம்­முறை தேர்­தலில் போட்டித் தன்­மைகள் விரிந்து நிற்­கின்­றன. கிழக்கு மாகாணம், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பா­றை ­யென்ற மூன்று மாவட்­டங்­களைக் கொண்­டது.

இம்­மூன்று மாவட்­டங்­க­ளிலும் ஒட்­டு­மொத்­த­மாக 16, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும். மாவட்ட ரீதி­யாக நோக்கின் மட்­டக்­க­ளப்பு 5, திரு­கோ­ண­மலை 4, அம்­பாறை 7 மொத்­த­மாக 16 உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றுக்கு கிழக்கு மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்டும். இங்கு மாவட்டந் தோறும் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்­களின் எண்­ணிக்­கைகளைப் பார்ப்போம். திரு­கோ­ண­மலை மாவட்டம் மூன்று தேர்தல் தொகு­தி­களைக் கொண்­டது. போனஸ் ஆசனம் உட்­பட, 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும். 256,852 வாக்­கா­ளர்­களைக் கொண்ட இம்­மா­வட்­டத்தில் 15 அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­சி­களும் 6 சுயேட்சைக் குழுக்­களும் போட்­டி­யி­டு­கின்­றன. 147 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்,

 இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டிய விடயம் என்­ன­வென்றால் இம்­முறை தேர்­தலில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற அந்­தஸ்­துடன் ஏழு பேரும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் என்ற வகையில் மூன்று பேரும் போட்­டி­யிடும் உச்ச நிலை­யொன்று காணப்­ப­டு­கி­றது.

சிறிது விரி­வாகப் பார்ப்­போ­மானால், த.தே. கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா. சம்­பந்தன், இதே கட்­சியைச் சேர்ந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க. துரை­ரட்­ண­சிங்கம், பொது­சன ஐக்­கிய முன்­ன­ணியின் வேட்­பாளர்­க­ளாக, முன்னாள் பிரதி அமைச்­சரும் கிழக்கு மாகாண சபை முத­ல­மைச்­ச­ரு­மான நஜீப் ஏ மஜீத், அதே கட்­சியில் முன்னாள் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்­சி­நி­லமே, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பட்­டி­யலில் பிரதி அமைச்சர் மற்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நி­தி­யு­மான எம்.எஸ். தௌபீக், முன்னாள் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மா­கிய முஹம்மட் மஃறூப், இதே கட்­சியில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் சாந்த மற்றும் மாகாண சபையின் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரான இம்ரான் மஃறூப்பும் போட்­டி­யி­டு­கின்­றார்கள்.

தொகுப்­பிட்டுக் காட்டப் போனால் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் த.தே.கூட்டமைப்பு ஐ.தே. கட்சி மற்றும் ஐ.ம. சுதந்­திரக் கூட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றி­லி­ருந்து முன்னாள் உறுப்­பி­னர்­களே இத் தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருப்­பதைக் காணலாம். வாச­கர்­களின் தெளி­வுக்­காக கூறு­வ­தானால் திரு­மலை தேர்தல் தொகுதி தமிழ் மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட தொகுதி. மூதூர் முஸ்லிம் மக்­க­ளையும் சேரு­வில சிங்­கள மக்­க­ளையும் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட அத்­தொ­கு­தி­களின் வாக்­காளர் தொகை பின்­வ­ரு­மாறு அமைந்து காணப்­ப­டு­கி­றது.

திரு­கோ­ண­மலை 86,978 மூதூர் 95,804, சேரு­வில 74,070 வாக்­கா­ளர்­களைக் கொண்­டது. 5 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட மாவட்டம் மட்­டக்­க­ளப்பு மாவட்டம். 3,65,167 வாக்­காளர் தொகையை கொண்ட இம்­மா­வட்­டத்தில் பட்­டி­ருப்பு தேர்தல் தொகுதி 87,611 வாக்­கா­ளர்­க­ளையும், கல்­குடா 1,05,055, மட்­டக்­க­ளப்பு 1,72,497 வாக்­கா­ளர்­களைக் கொண்ட தேர்தல் தொகு­திகள். இம்­மா­வட்­டத்தில் தமி­ழர்கள் 74 வீத­மா­கவும் முஸ்லிம் மக்கள் 25.05 வீத­மா­கவும் சிங்­கள மக்கள் 0.5 வீத­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர்.

இம்­மா­வட்­டத்தில் இம்­முறை 16 பிர­தான அர­சியல் கட்­சி­களும் 30 சுயேட்­சைக்­கு­ழுக்­களும் வேட்பு மனு தாக்கல் செய்­துள்­ளன. தொகுத்துப் பார்த்தால் 5 உறுப்­பி­னர்­களைக் கொண்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 388 பேர் போட்­டி­யி­டு­வதைக் காண முடி­கி­றது. இம்­மா­வட்­டத்தில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் என்ற வகையில் கணி­ச­மானோர் போட்­டி­யி­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இப்­போட்­டி­யா­னது பாரா­ளு­மன்ற தேர்­தலை கடுந்­தன்மை ஆக்­கி­யுள்­ள­தென்றே கூற வேண்டும்.

இம்­மா­வட்­டத்தில் கலைக்­கப்­பட்ட (2015) பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பட்­டி­யலில் பொன். செல்­வ­ராஜா, சீ. யோகேஸ்­வரன், ப. அரி­ய­நேத்திரன், ஐ.ம.சு. கூட்­ட­மைப்பின் சார்பில் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், ஐ.தே. கட்­சியின் சார்பில் முன்னாள் பிரதி அமைச்­ச­ரான எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோர் போட்­டி­யி­டு­கின்­றார்கள்.

இதே­வேளை 2010 ஆம் ஆண்­டுக்கு முன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் பட்­டி­யலில் ஜி. கரு­ணா­கரன் (ரெலோ), ஜி. சௌந்­த­ர­ராஜன் (ஈரோஸ்), பொது­சன ஐக்­கிய முன்­னணி பட்­டி­யலில் முன்னாள் பிரதி அமைச்சர் சோ. கணே­ச ­மூர்த்தி, ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அழ­கையா இரா­ச­மா­ணிக்கம், ஐ.தே. கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் போட்­டி­யி­டு­கின்­றனர்.

இதே­போன்று மாகாண சபை உறுப்­பினர் பலரும் போட்­டி­யி­டு­வது மாகாண சபை­யி­லி­ருந்து இன்­னு­மொரு தளத்­துக்கு பாயும் முயற்­சி­யாகக் காணப்­ப­டு­கி­றது. தற்­போது மாகாண சபையில் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­போரில் ஐ.ம.சு. கூட்­ட­மைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­னே­சதுரை சந்­தி­ர­காந்தன், எம்.எஸ். சுபைர் ஆகி­யோரும் முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ள­ராக ஷிப்லி பாறூக்கும் போட்­டி­யி­டு­கின்­றார்கள். மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் என்ற வகையில் எஸ். ஜவாகிர் சாலி (ஐ.ம.சு. கூ.) போட்­டி­யி­டு­கின்றார்.

இதே­போன்­ற­தொரு நிலையே அம்­பாறை மாவட்­டத்­திலும் காணப்­ப­டு­கின்­றது. 4,65,757, வாக்­காளர் தொகையைக் கொண்ட இம்­மா­வட்­டத்தில் 7 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­காக 11 பிர­தான கட்­சி­க­ளையும் 24 சுயேட்சைக் குழுக்­க­ளையும் சேர்ந்த 350 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலை காணப்­ப­டு­கி­றது. நாம் முன்பு குறிப்­பிட்­டதைப் போல் அம்­பாறை மாவட்­டத்தின் வேட்­பா­ளர்­க­ளாக கலைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தில் 7 பேர் போட்­டி­யி­டு­வதைக் காணலாம்.

முன்னாள் அமைச்­சரும் தேசிய காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மா­கிய ஏ.எல்.எம். அதா­வுல்லாஹ் ஐ.ம. சுதந்­திரக் கூட்­ட­மைப்­பிலும், பைசல் ஹாசிம் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் ஐ.தே. கட்­சி­யிலும், இதே­போன்று எச்.எம்.எம். ஹரீஸ் ஐ.தே. கட்­சி­யிலும் போட்­டி­யி­டு­கின்­றார்கள். முன்பு ஐ.ம.சு.மு. வில் கேட்டு வெற்றி பெற்ற ரி. தயா­ரட்ண இம்­முறை ஐ.தே. கட்சி பட்­டி­ய­லிலும் த.தே.கூட்டமைப்பில் போட்­டி­யிட்டு வென்ற பி.எச். பிய­சேன இம்­முறை ஐ.ம.சு. கூட்­ட­மைப்பின் வேட்­பாள­ரா­கவும் இதே பட்­டி­யலில் சரத் வீர­சே­கர, சிறி­யாணி விஜே­விக்­கி­ரம ஆகியோர் கலைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­துள்­ளனர்.

2010 முன்­னுள்ள பாரா­ளு­மன்றில் அங்கம் வகித்த விம­ல­வீர திசாநா­யக்க, ஐ.ம.சு.கூட்ட மைப்பின் வேட்­பா­ள­ரா­கவும் மற்றும் சந்­தி­ர­தாச ஹல­பதி ஐ.தே. கட்­சி­யிலும் போட்­டி­யிடும் அதே­வேளை, சந்­தி­ர­நேரு சந்­தி­ர­காந்தன் த.தே.கூட்டமைப்பின் வேட்­பாளர் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இம்­முறை அம்­பாறை மாவட்­டத்தில் தனித்து போட்­டி­யி­டு­கி­றது. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரு­மான அப்துல் மஜீத் தலைமை வேட்­பா­ள­ராக வேட்பு மனுவில் கையொப்பம் இட்­டுள்ளார்.

தற்­போ­துள்ள கிழக்கு மாகாண சபையில் அங்­கத்­த­வர்­க­ளாக இருந்து கொண்­டி­ருக்­கின்ற சுமார் 5 உறுப்­பி­னர்­களும் முன்னாள் உறுப்­பினர் ஒரு­வரும் போட்­டி­யிடும் அள­வுக்கு அம்­பாறை மாவட்­டத்தின் போட்­டி­களில் கடும் தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. கிழக்கு மாகாண சபையின் சுகா­தார அமைச்­ச­ராக 2008 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த முஹம்மட் மன்சூர் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் ஐ.தே. பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ளார்.

மாகாண கல்வி அமைச்­ச­ராக இருந்த விம­ல­வீர திசா­நா­யக்க ஐ.ம.சு. கூட்­ட­மைப்­பிலும் ரி. கலை­ய­ரசன் த.தே. கூட்­ட­மைப்பின் சார்­பிலும் சந்­தி­ர­தாஸ ஹல­பதி மற்றும் தயா ஹமகே ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பா­ளர்­க­ளா­கவும் கள­மி­றங்­கி­யுள்­ளனர். இதே­வேளை கிழக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ராக (2008– 2012) து. நவ­ரட்­ண­ராஜா ஐ.ம.சு. கூட்­ட­மைப்பின் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ளார். இவை­யொ­ரு­பு­ற­மி­ருக்க தேசியப் பட்­டி­யலில் இடம்­பெற்­றி­ருப்­போரும் கிழக்கு மாகா­ணத்தில் அதி­க­மா­க­வுள்­ளனர் என்­ப­தற்கு அ.இ. மக்கள் காங்­கி­ரஸை சேர்ந்த மாகாண சபை உறுப்­பினர் ஓ.எம். ஜெமீல் ஐ.தே. கட்­சியின் தேசியப் பட்­டி­ய­லிலும் முன்னாள், வீதிப் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக இருந்த (2008– 2012) தேசிய காங்­கி­ரஸைச் சேர்­நத எம்.எஸ். உதுமா லெப்பை ஐ.ம.சு. கூட்­ட­மைப்பின் தேசியப் பட்­டி­ய­லிலும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

கடந்த பாரா­ளு­மன்­றத்தில் தேசியப் பட்­டியல் மூலம் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) வேட்­பாளர் பட்­டி­ய­லிலும் இடம்­பெ­ற­வில்லை. தேசிய பட்­டி­ய­லிலும் சேர்க்­கப்­ப­ட­வில்லை. இது பெரும் ஏமாற்­ற­மா­கவே பேசப்­ப­டு­கி­றது. இதே­போ­ன­்ற­தொரு நிலைதான் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஐ.தே.க. பட்­டி­யலில் மு. காங்­கிரஸ் சார்பில் தெரி­வா­கி­யி­ருந்த சேகு­தாவூத் அவர்­க­ளுக்கு மு.கா.பட்­டி­ய­லிலும் இடம் அளிக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஆத­ரித்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி வழ­மைபோல் இம்­மு­றையும் ஐ.தே.க. வின் தேசியப் பட்­டி­யலில் இடம்­பி­டித்­துள்ளார் இவை­யெல்­லா­வற்­றையும் நுணுகி அணுகி ஆராய்ந்து பார்க்­கின்­ற­போது வேறு எந்த மாகா­ணத்­திலும் இல்­லாத அள­வுக்கு கிழக்கு மாகா­ணத்தில் முன்னாள் இந்நாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் தேர்தல் பட்­டி­யலில் இடம்­பெற்­றி­ருப்­பதைப் பார்க்­கின்­ற­போது, பாரா­ளு­மன்­ற­மென்­பது தனது கன­தியைக் குறைத்துக் கொண்டு விட்­டதா இல்­லை­யாயின் அது தனது சலு­கை­களைக் கூட்டிக் கொண்­டு­விட்­டதா? என்று சந்­தேகம் கொள்ள வைக்­கி­றது.

இந்­நி­லைமை கிழக்கு மாகா­ணத்­துக்கு மாத்­தி­ர­மல்ல, ஏனைய மாகா­ணங்­க­ளிலும் இவ்­வா­திக்கம் வலுத்துக் கொண்டு போகின்­றது என்­பதே உண்மை. கிழக்கு மாகாணத்­தி­லுள்ள 16 பார­ாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­காக 835 வேட்­பா­ளர்கள் பல்­வேறு கட்­சிகள் சார்­பிலும் சுயேட்சைக் குழுக்கள் சார்­பிலும் போட்­டி­யி­டு­வது 15 ஆவது பொதுத் தேர்­தலில் ஆச்­ச­ரி­ய­மான ஒரு விட­யம் தான். கிழக்கு மாகாணம் ஏனைய மாகா­ணங்­களை விட மிக வளப்­பெ­ருக்கம் கொண்ட மாகா­ண­மாகும். நீர் வளம் நில வளம், கடல் வளம், கட்டு வளம் மற்றும் மூல வளம் ஆகி­ய­வற்றில் ஏனைய மாகா­ணங்ளை விட உயர்ந்த நிலையில் உள்­ள­தொரு மாகா­ண­மாகும்.

ஒப்­பீட்டு ரீதியில் இதன் வளர்ச்சி பின்­னிலை கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது. கடல் வளத்தை மிகப் பெரி­ய­ளவில் கொண்­டி­ருக்கும் இம் மாகா­ணத்தின் கடல் வளங்­களோ, கனி வளங்­களோ இந்த மாகா­ணத்தின் பிர­தேச அபி­வி­ருத்­திக்கு உதவும் வீதம் ஒப்­பீட்டு அளவில் குறைவுத் தன்மை கொண்­டதே. நெல் விளையும் பொற்­பூ­மி­யென்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்­ற­போதும், ஒரு காகித ஆலைக்குப் பின்னோ, கந்­தளாய் சீனி ஆலைக்குப் பின்னோ, கன­ர­க­மான கைத்­தொழில் சாலைகள் நிறு­வப்­ப­ட­வு­மில்லை.

மாவட்ட சபை முறை வந்து அதன் பின்னே மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­ட­போதும் மக்­களின் வரு­மா­னத்தில் எவ்­வித எழுச்­சி­யு­மில்லை. வாழ்க்கைத் தரத்தில் உயர்ச்­சி­யு­மில்லை. இலட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­களும் யுவ­தி­களும் வேலை வாய்ப்­பற்று பயன்­பட முடி­யாத மனித மூல­த­னங்­க­ளாக உதி­ரி­க­ளாக திரியும் அவ­லங்­களைக் காணு­கின்றோம். ஆனால் முடிந்­து­போன 14 தேர்­தல்­க­ளிலும் எத்­த­னையோ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்­றத்தை அலங்­க­ரித்து சென்று விட்­டார்கள்.

 மாகா­ணமோ, பிர­தே­சமோ அடைந்த பெறு­மானம் என்ன என ஆராய்ந்து பார்ப்பின் அடைபெறுமானம் பூஜ்ஜியமாகவே இருக்கிறது. நகர சபைகளிலிருந்து மாநகர சபைகளிலிருந்தும் பதவி உயர்வு பெற்று மாகாண சபைக்கும் மாகாண சபையிலிருந்து பாராளுமன்றுக்கும் இலக்கு வைக்கும் அரசியல் ஆர்வலர்கள் அந்த அரசியலை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் அரங்கமாக பாவிக்கும் உயர்ந்த நுட்பத்தை மறந்துபோய் குடும்ப வட்டத்துக்குள் அடைப்பட்டுப் போகும் நிலை மாற வேண்டும்.

இலங்கையின் சனத் தொகையிலும் வேட்பாளர் தொகையிலும் பெண்கள் அதிகமாக இருக்கின்றபோதும் வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுவதுபோல், கிழக்கிலும் இந்நிலை பலவீனமாகவே காணப்படுகிறது.

இவ்வளவு பெருந்தொகையான கட்சிகள் வேட்பாளர்கள் சுயேட்சையாளர்கள் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்பது, புரியாத புதிராகவே இருக்கின்றது. மேலை நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா பிரித்தானியா, கனடா எனும் வளர்ச்சி அடைந்த ஜனநாயக முறை நாடுகளைப் போல் போட்டியிடும் கட்சிகள் சுயேட்சையாளர்களின் எண்ணிக்கை குறைக்கும் முறையொன்றை வகுத்து காத்திரமான தேர்தல் முறையொன்றுக்கு எம்மைப் போன்ற சிறு நாடுகள் கொண்டு செல்லப்படுவதன் மூலமே மக்களுக்கும் கட்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள நெருக்க நிலை அதிகரிக்க முடியும்.

 எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது போல் எல்லோரும் வேட்பாளர்கள் என்ற முறை தேவைதானா என்பதை மக்களே முடிவு எடுக்க வேண்டிவரும்.