பாம்பின் தலையை நசுக்கிய நிலையே மஹிந்த விடயத்தில் ஏற்பட்டுள்ளது! என்கிறார் சம்பிக்க
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
பாம்பின் தலையை நசுக்குவதால் அது இறந்துவிடாது. அதன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும். அதேபோன்று தான் இன்று மஹிந்தவின் நிலைமை காணப்படுகின்றது. எனவே முழுமையாக அரசியலில் இருந்து மஹிந்த துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் அம் முன்னணி தெரிவித்தது.
பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் வெரட்ஜ்" ஹோட்டலில் நடைபெற்ற நல்லாட்ச்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவிடையங்களை குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் பொதுத் தோ்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை பலத்தை வெற்றி பெற்று ஆட்சியமைப்பது நிச்சயமாகும். ஆனால் தேர்தலுக்கு பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பிலும் ஆராயப்படும். அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
கடந்த காலங்களில் வறுமையை அரசியலாக்கி சமுர்த்தி கொடுப்பனவு பொறுவோரை மனிதக் கேடயகங்களாக்கியே ஜனாதிபதித் தேர்தலில் பஷிலினால் மஹிந்தவுக்கு 57 இலட்சம் வாக்குகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இம் முறை பொதுத் தோ்தலில் இந்த விளையாட்டுகளுக்கு எல்லாம் இடமில்லை. நியாயமான நீதியான தேர்தல் நடைபெறவுள்ளது எனவே மஹிந்தவுக்கும் அவர் ஆதரவு அணிக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.
ஜனாதிபதி 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணைகளுக்கு மதிப்பளித்து, மஹிந்தவை நிராகரித்துள்ளார். இதனை வரவேற்கின்றோம். எமது முன்னணியை எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்வோம். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ஸ்திரமான ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எமது முன்னணியின் தலைவராக்குவோம். இப்போதே இது தொடர்பாக எதனையும் கூற முடியாது.
ஜனாதிபதியின் விசேட உரைக்குப் பின்னர் மஹிந்தவின் புகைப்படத்தைக் காட்டி வாக்குகளை கொள்ளையடித்து பாராளுமன்றம் வரக் கனவு காண்பவர்கள் இன்று திசைத் தடுமாறி போயுள்ளனர். அன்று சமஷ்டி முறையை ஆதரித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று ஒற்றையாட்சி முறையை ஏற்றுக் கொள்ள செய்துள்ளோம். இது எமக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிடுகையில்,பாம்பின் தலையை நசுக்குவதால் மட்டும் பாம்பு இறந்துவிடாது. அதன் உயிர் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கும் வாலும் உடம்பும் உயிர்ப்புடன் இருக்கும், அதேபோன்றுதான் மஹிந்தவின் நிலை. இன்று உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அதனை மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பணயக்கைதியாக்க முயற்சித்தார். ஆனால் இன்று அது தோல்வி கண்டுள்ளது. ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக் கொண்ட ஜனநாயக வெற்றியை மீள திருப்ப எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க மாட்டோம் என்றார்.