மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம்! ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் சூளுரை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகமனதான தீர்மானமாகும்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் தெரிவுசெய்யப்படுவார். யார் தடுத்தாலும் மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அவரே தொடர்ந்தும் தலைவராக இருப்பார் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அதன் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் பொதுச்செயலாளர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் வெற்றியை தக்கவைக்கும் நோக்கத்தில் நாட்டில் அரச உடைமைகளையும், அரசாங்க சொத்துக்களைவும் பாவித்து தமது தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. அரச வாகனங்கள், அரச ஊழியர்கள் என அரச வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி வருகின்றது. எனவே தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக்கும். ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் பின்னணியை உருவாக்க நாம் இடம்கொடுக்க மாட்டோம்.
எமது அரசாங்கத்தை உருவாக்கவே நாம் முயற்சிக்கின்றோம். மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அல்ல. எதிர்வரும் தேர்தலில் எமது கட்சியை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். மாவட்ட மட்ட கூட்டங்கள் மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுத்து வருகின்றோம்.
அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கை தொடர்பில் எம்மால் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. ஒருசில முரண்பாட்டுக் கருத்துக்கள் உள்ளன. அவை தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்போம். அத்தோடு ஜனாதிபதியின் அறிவித்தலுடன் எமது கட்சிக்குள் சிறந்ததொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்த சம்பவத்துடன் பிரிந்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுபட்டு ஒரு அணியில் வந்துள்ளனர். கடவுள் வரம் கொடுத்ததைப்போல் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியை அமைப்போம்.
இதில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்த குறிப்பிடுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ தோற்கும் தலைவர் அல்ல நாம் அவரை தோற்க விடமாட்டோம். தோல்வியை தழுவுவதாக இருந்தால் நாம் தேர்தலில் களமிறங்க மாட்டோம். வெற்றி பெறுவோம் என்று தெரிந்ததன் காரணத்தினால் தான் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளோம்.
அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ கட்சிக்குள் மீண்டும் வருவது நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கவேயாகும். அதேபோல் அவர் ஆட்சி அதிகாரத்துக்கும், பதவிக்கும் ஆசைப்படுபவர் அல்ல. அப்படி இருந்திருந்தால் அவர் கட்சி தலைமை பதவியையோ அதிகாரத்தையோ விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். கடந்த காலத்தில் முன்னைய தலைவர்கள் தமது அதிகாரத்தை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை நாம் பார்த்துள்ளோம் என்றார்.
கேள்வி :- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவிக்கு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதா ?
பதில் :- இல்லை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே ஆவார். அவரை நீக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. அவரே தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருப்பார். நாம் ஏனையவர்கள்போல் சதி செய்து அவரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி :- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் பதவிக்கு மஹிந்தவை நியமிக்க அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அப்படியாயின் ஏன் மஹிந்த போட்டியிடுகின்றார்?
பதில் :- பிரதமர் வேட்பாளர் யார் என்பது கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக் அமையவே முடிவெடுக்கப்படும். ஜனாதிபதியே அதை பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். ஆகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகமனதான தீர்மானத்தை கேட்டால் அனைவரும் மஹிந்தவின் பெயரைத்தான் முன்வைப்பார்கள். ஆகவே நாம் ஆட்சி அமைத்தால் பிரதமர் பதவிக்கு மஹிந்தவை கொண்டுவருவோம். எமது தீர்மானமே கட்சியில் இறுதி முடிவாக அமையும்.அதேபோல் ஜனாதிபதி எமது கோரிக்கைக்கு இணங்குவார். மேலும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாக நாம் தான் இருக்கின்றோம்.
மேலும் ஜனாதிபதிக்கும் எமக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. ஜனாதிபதி சில அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளார். ஆகவே அதை நாம் நிவர்த்தி செய்வோம். மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்கள் அது நடக்கவில்லை, குழுத்தலைவர் வழங்கப்படாது என தெரிவித்தனர் அதுவும் நடக்கவில்லை. இப்போது பிரதமராக்க மாட்டோம் என்கின்றனர் அதுவும் நடைபெறாது. மஹிந்தவை நாம் பிரதமர் ஆக்குவோம்.