20 இற்கு ஐ.தே.க.வே முட்டுக்கட்டை : சுதந்திரக்கட்சி குற்றச்சாட்டு
தேர்தல் முறை மாற்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக மாற்ற வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமுமில்லை.
எமது யோசனையே சிறுபான்மை கட்சிகளுக்கு உகந்த முறைமையாகும். ஆகவே இந்த விடயத்தில் எவரும் எமக்கு நிபந்தனை விதிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற விவகார அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றாது தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிடுவது நாம் அல்ல. மாறாக, ஐக்கிய தேசியக் கட்சியேயாகும். அவசரமாக தேர்தலுக்குச் செல்லும் ஐ.தே.க. வின் நிகழ்ச்சிநிரலை எம்மால் ஒரு போதும் செயற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபயவர்த்தன சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து, தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
அது போலவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு கொண்டு, எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறங்கி வெற்றிப்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடிப்படை வாக்குறுதியாக இதனையே உள்ளடக்கியிருந்தார்.
இந்நிலையில் இந்த இரண்டு தரப்பினர்களுக்கும் வாக்களித்தவர்கள் மேற்குறிப்பிட்ட அடிப்படை வாக்குறுதிகளுகாகவே வாக்களித்துள்ளனர். எனவே முழு நாட்டு மக்களினதும் அடிப்படை கோரிக்கையாக ஜனாதிபதி முறைமையையும் தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்பதாகவே உள்ளது.
இதற்கமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலான அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டவர்கள் என்ற வகையில் ஆதரவு நல்கி வெற்றிப்பெற செய்தோம். 19 ஆவது திருத்தத்திற்கு பிறகு 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே பெருமளவில் தடையாக இருந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை கொண்டுவருவது தொடர்பில் நாட்டு மக்கள் அதிகளவில் கவனம் செலுத்தவில்லை. எனினும் தேர்தல் முறைமை மாற்றம் என்ற விடயத்தில் மக்களுடைய அவதானம் அதிகளவில் உள்ளது.
ஒவ்வொரு தொகுதி மக்களும் தமக்கென ஒரு பிரதிநிதி வரவேண்டும் என்று விரும்புவார்கள். தொகுதிக்கு பொறுப்பு கூறும் தேர்தல் முறைமையை மக்கள் எதிர்ப்பார்த் துள்ளனர். அது போலவே விருப்பு வாக்கு தேர்தல் முறைமையினூடாக தேர்தலுக்கு செலவிடும் தொகை அதிகமாகவே காணப்படுகிறது. இந்த கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
இந்ந நிலையில் அனைத்து கட்சியினரும் ஏற்றவகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 255 ஆக அதிகரிக்கும் வகையிலான யோசனையை நாம் முன்வைத்தோம். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனையாக கருதப்படும் 225 ஆசனங்களையே அமைச்சரவை அங்கிகரித்துள்ளது. குறித்த யோசனை சிறுப்பான்மை இனத்தவர்களுக்கோ சிறிய அரசியல் கட்சிகளுக்கோ உகந்தது அல்ல. இந்நிலையில் சிறுப்பான்மை இனத்தவர்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் எமக்கு நிபந்தனை விதிக்க முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் தொகையை 255 ஆக மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் உள்ளோம். இந்த விடயத்தில் எமது நிலைப்பாட்டினை மாற்ற இயலாது. இந்த முறைமையே சிறுப்பான்மை கட்சிகளுக்கும் பெருமளவில் உகந்ததாக காணப்படும்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு நல்கியதனை போன்று 20 அவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவினை நல்குவோம். இருப்பினும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் ஆதரவு வழங்குவதனை போன்று காலத்தை இழுத்தடிப்பது நாம் அல்ல. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் அவசரமாக பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஐ.தே.க. ஆகும். ஆரம்பத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதும் அந்த கட்சியாகும்.
ஆகவே அவசரமாக தேர்தலுக்கு செல்லும் ஐ.தே.கவின் நிகழ்ச்சி நிரலை எம்மால் ஒரு போதும் செயற்படுத்த முடியாது. நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினையாக கருதப்படும் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்து விட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றார்.
அநுரபிரியதர்ஷன யாப்பா கருத்து
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு முழுமையாக எதிர்ப்பு வெ ளியிட்டு வருபவர்கள் ஐக்கிய தேசியக் கட்சினரே ஆவர். இந்த விடயத்தில் ஆதரவு வழங்குவதனை போன்று மக்களிடத்தில் அவர்கள் வித்தை காண்பிக்கின்றனர் என்று இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா எம்.பி. குற்றம் சுமத்தினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவது உறுதியாகும். தேர்தல் முறைமையை உள்ளடக்கிய குறித்த சட்டத் திருத்ததை நிறைவேற்ற வேண்டிய எந்தவொரு தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்க வில்லை. இந்நிலையிலேயே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கைக்கு எடுத்துக்கொண்டார். இதன்பிற்பாடே தேர்தல் மறுசீரமைப்பு சாத்தியமானது.
எவ்வாறாயினும்தற்போது அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தின் 225 ஆசன திருத்தம் உகந்த முறைமையல்ல. இதனை மாற்றி நாட்டில் வாழும் அனைவரும் ஏற்றால்போல் தேர்தல் முறைமையில் மறுசீரமைக்க வேண்டும்
இந்த திருத்தச்சட்டத்தை ஐ.தே.க .இழுத்தடிப்பு செய்து வந்தது. 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறிவிட்டு நாட்டு மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வித்தை காண்பிக்கின்றது என்றார்.