Breaking News

புலம்பெயர் தமிழருடன் இரகசியப் பேச்சு நடத்தவில்லை - இலங்கை அரசு

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் வெளிப்படையாக பேச்சு நடத்தியதாகவும், இதில் எவ்வித இரகசியமும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று நடந்த வாராந்த செய்தியாளர் சந்திப்பில், லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக, எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

“கடந்தகால கசப்பான அணுபவங்களை மறந்து இன, மத பேதமின்றி நல்லிணக்கத்திற்காக ஒத்துழைப்பு வழங்க முன்வரும் அனைவரின் உதவிகளையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது.

கடந்தகால அரசியலை திருப்பி பார்த்தால் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள இயலாது. எமக்கு தனி நபர் அல்லது அமைப்பு மீது நம்பிக்கை கொள்வதனை விட நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதே இலக்காகும்.

நல்லிணக்க ஆணைக்குழு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பல சிபாரிசுகளை முன்வைத்துள்ளது. அந்த சிபாரிசுகளுக்கமைய நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து இனங்களுக்கிடையிலும் பேச்சு நடத்தப்பட வேண்டிய அதேவேளை வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுடனும் பேச்சு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் அனைத்து இனங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடனும் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் லண்டனில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் புலம்பெயர்ந்தோருக்கான விழா ஒன்றை நடத்தப்படவுள்ளது. ஆண்டுதோறும் இந்த விழாவை தொடர்ந்து முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.