20ஆவது திருத்தம் குறித்து ஸ்திரமற்ற நிலையில் கட்சிகள்! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
20ஆவது திருத்தச்சட்ட மூலம் குறித்து அரசியல் கட்சிகள் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்ட நிலையிலும் அது குறித்து அரசியல் கட்சிகள் ஸ்திரமற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி 225பாராளுமன் உறுப்பினர்களின் எண்ணிகையில் மாற்றம் ஏற்படுத்துவதை விரும்ப வில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே அச்சட்ட மூலமானது வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரவுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆகவே இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அது தொடர்பில் விவாதங்களை மேற்கொள்ளவேண்டுமாயின் குறித்த நம்பிக்கையில்லாப்பிரேரணைகள் கொண்டுவரப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்றதொரு நிலைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சிக்க காணப்படுகின்றது.
மறுபுறத்தில் சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகள் இச்சட்ட மூலம் தொடர்பாக அதிருப்தியடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவரும் 20ஆவது திருத்தம் குறித்து உறுதியற்றதொரு நிலைமையே நீடிக்கின்றது. மேலும் பிரதமருடான சந்திப்பிலும் இச்சட்ட மூலம் குறித்து இறுதி முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை. ஆகவே இது தொடர்பில் அடுத்த கட்டங்களை பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது என்றார்.